கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக பரவி வருகிறது.  இந்தியாவிலேயே ஒரு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா பாதிப்பு என்பது அதிகம். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கை வேண்டும். கோவை மாவட்டத்திற்கு கூடுதலான தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். தினசரி 30 ஆயிரம் தடுப்பூசிகளை போடும் அளவிற்கு மாநில அரசு தடுப்பூசிகளை ஒதுக்கவேண்டும். அடுத்த பத்து நாட்களுக்கு இதை நிச்சயமாக பின்பற்ற வேண்டும்.


மாநில அரசுக்கு மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளை அளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் மாநில அரசு கையிருப்பில் வைத்திருக்கும் தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்லாமல் தொடர்ந்து தடுப்பூசிகளை மட்டும் கேட்கிறது. கையில் இருக்கும் தடுப்பூசிகளை இரண்டு நாட்களில் மக்களுக்கு செலுத்த வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு கூடுதலாக ஊசிகளை மட்டும் கேட்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழகம்  தடுப்பூசிகளின் வீணாக்குவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேசமயம் மத்திய அரசு வெளி நாடுகளிலும் உள் நாடுகளிலும் தடுப்பூசி தயாரிப்பில் தீவர கவனம் செலுத்தி வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அரசியல் செய்ய வேண்டாம் என பத்திரிகைகளில் குறிப்பிட்டு வருகிறார். ஆனால் மக்களுக்காக பணி செய்வதற்காக தான் நம் அரசியல் இருக்கிறோம். மக்கள் தேவையை பூர்த்தி செய்யுங்கள். அனைவரும் சேர்ந்தே அரசியல் செய்யலாம்” என்றார்.



சமூக வலைதளங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு தலா 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து கேள்விக்கு, ”யாரோ இரண்டு பேர் போனில் பேசுவதற்கு எல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது. தேர்தல் நேரத்தில் செலவுகள் குறித்து ஆணையத்திடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கேமராவுடன் அதிகாரிகள் பின் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்கள். இதில் எதுவும் உண்மை இல்லை. இதற்கு மேல் இதில் கூற ஒன்றுமில்லை” என பதிலளித்தார்.


தொடர்ந்து பேசி அவர், ”தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதலான ஆக்சிஜனை பெற்றுள்ளோம். அதேபோன்று தடுப்பூசிகளையும் கூடுதலாக கேட்டுள்ளோம். நான் கோவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. எங்கள் மாவட்ட மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். ஆகையால் கோவை மாவட்டத்திற்கென கொஞ்சம் கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் மதுவந்தி மீது பாஜகவில் இருக்கிறார் என்பதற்காக அவதூறுகளை அள்ளி வீசுவதை கண்டிக்கிறோம். இந்த மாநிலத்தில் யாரும் எந்த சித்தாந்தையும் ஏற்றுக் கொள்ளலாம். எந்த சாதி என பார்த்து விமர்சிப்பது தவறு. இதுபோன்ற விமர்சனங்கள் வருவதை மாநில அரசு காவல் துறை மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவந்தி மீது ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய நபர்களே தவறான கருத்துக்களை கூறி வருகின்றனர். அவர்கள் மீது கட்சி நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்  தெரிவித்தார்.