கோவையில் யூடியூபர் வீட்டிற்குள் புகுந்து கத்தியைக் காட்டி திருட முயன்ற நபரை மடக்கி பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


யூடிபர்:


கோவை மாவட்டம் க.க. சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிச்சனூர் பகுதியில் சுஹைல் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் சுஹைல் விலாக் என்ற பெயரில் யூடியூப்பில் வீடியோக்களக் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ம் தேதியன்று அவரது வீட்டிற்குள் ஒரு திருடன் புகுந்துள்ளார். அப்போது கத்தியைக் காட்டி மிரட்டி சுஹைல் கையில் இருந்த செல்போனை திருட முயன்றுள்ளார்.


அப்போது அந்த திருடனை தனது நண்பர் ஹரி என்பவரின் உதவியுடன் இலாவகமாக மடக்கி பிடித்த சுஹைல், க.க. சாவடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினரிடம் அத்திருடன் ஒப்படைக்கப்பட்டார். 




இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வீடு புகுந்து திருட முயன்ற நபர் புதுச்சேரியை சேர்ந்த அனுராமன் (25) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சுஹைல் அளித்த புகாரின் பேரில் அனுராமனை மீது க.க.சாவடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அனுராமனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுஹைல் தனது வீட்டிற்குள் திருடன் புகுந்து திருட முயன்றது மற்றும் மடக்கிப் பிடித்த சிசிடிவி காட்சிகளை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


தூங்கிய திருடன்:


அதில் பேசும் சுஹைல், “திருடன் வீட்டின் காம்பவுண்டை தாண்டிக் குதித்து உள்ளே வந்துள்ளான். கதவை உடைத்து வீட்டிற்குள் வந்திருந்தால் அலாரம் அடித்திருக்கும். ஆனால் அப்படி செய்யாமல் பின்பக்க வழியாக மொட்டை மாடிக்கு சென்று 3 மணி நேரம் தூங்கியுள்ளான். எதையும் எடுத்துச் செல்லாமல் தூங்கியுள்ளான். என்ன செய்கிறொம் எனத் தெரியாமல் அவன் செய்தது போல இருந்தது.




பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாட்டிற்காக அதிகாலையில் எழுந்து லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வீட்டிற்கு வந்த நண்பர் ஹரி, வாட்ஸ் ஆப்பில் போன் செய்தான். நான் லேப்டாப் உடன் வெளியே சென்ற போது, ஒருவன் திடீரென பின்னால் வந்து என்னை பிடித்துக் கொண்டான். கையில் கத்தியை வைத்திருந்தான். முதலில் தெரிந்தவர்கள் தான் விளையாட்டிற்கு செய்வதாக நினைத்தோம். பின்னர் தான் திருடன் என்பது தெரிந்தது.


கத்தியை காட்டி கையில் இருந்த செல்போனை திருட முயன்றான். உடனே அவனது கையைப் பிடித்து சுற்றி, கீழே தள்ளிவிட்டு கத்தியை பிடுங்கினோம். பின்னர் அவனது கை, கால்களை கயிறு வைத்து கட்டி அமரவைத்தோம். அவனிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து, காவல் துறையினர் வந்ததும் அவனை ஒப்படைத்தோம். இச்சம்பவத்தால் பாதுகாப்பு மற்றும் கவனமாக இருப்பது குறித்து கற்றுக் கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண