கோவையில் கஞ்சா வியாபாரிகளிடம் வங்கி கணக்கு மூலம் இலட்சக்கணக்கில் பணம் பெற்று வந்த சைபர் க்ரைம் உதவி ஆய்வாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை இரத்தனபுரி பகுதியில் கஞ்சா ப் அதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இரத்தினபுரி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரமடை பகுதியை சேர்ந்த சந்திரபாபு (33) என்பவரிடம் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து சந்திரபாவுவை கைது செய்த காவல் துறையினர், 1.2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். பின்னர் சந்திரபாபுவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவரது வீட்டிற்கு அருகே 7 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும், உள்ளூர் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சாவை விற்பனை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதன் பேரில் காவல் துறையினர் சோதனை நடத்தி கஞ்சாவை கைப்பற்றினர். இதையடுத்து மொத்தமாக 8.2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ்கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி, மணிகண்டன், மகேந்திரன் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதில் மகேந்திரன் (34) என்பவர் ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன், கடந்த 2011 ம் ஆண்டு முதல் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக 2018 முதல் 2020 ம் ஆண்டு வரை மகேந்திரன், கோவையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையில் பணியாற்றியுள்ளார். அவர் பணி புரிந்த காலத்தில், கஞ்சா தொடர்பான பல வழக்குகளை கையாண்டுள்ளார். அப்போது கஞ்சா கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துக் கொண்டுள்ளார். பின்னர் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை தயாரிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் கஞ்சா நெட்வொர்க்கின் விவரங்களை பகிர்ந்து கொண்டு கஞ்சா விற்பனை செய்ய உதவியுள்ளார். இதையொட்டி இரு தரப்பினரிடம் இருந்தும் தனது வங்கிக் கணக்குகள் மூலம் கமிஷனாக இலட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார். அவரது வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் பணம் வந்துள்ளது காவல் துறையினர் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து ரத்தினபுரி காவல் துறையினர் உதவி ஆய்வாளர் மகேந்திரனை கைது செய்தனர். கஞ்சா வியாபாரிகளிடம் பணம் பெற்றதாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்