திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுவது கிருஷ்ணர் அவதாரம். ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாக இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி வருவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே வைணவத் தலங்கள் களைகட்டி காணப்பபட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தார் என்று புராணங்கள் கூறுவதால் மாலை நேரத்தில் வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். கோயில்களிலும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற உள்ளது. இந்த நன்னாளில் வீடுகளில் கிருஷ்ணர் வாசம் செய்ய வேண்டும் என்பதற்காக அரிசி மாவில் குழந்தைகளின் பாதங்களை பதிய வைத்து அவர்களை வீட்டில் நடக்க வைப்பார்கள். இவ்வாறு செய்வதால் வீட்டில் கிருஷ்ணர் துள்ளி விளையாடியதாக கருதப்படும். அதேபோல, பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் அழகு பார்ப்பார்கள். பள்ளிகளில் இன்று கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புளியகுளம் பகுதியில் இயங்கி வரும் வித்யா நிகேதன் என்ற தனியார் சிபிஎஸ்சி பாடத்திட்ட பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பயிலும் மழலையர் பள்ளிக் குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள் வைக்கப்பட்ட நிலையில், அக்குழந்தைகள் வண்ண உடையில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வருகை புரிந்திருந்தனர். ஆனால் இதர வகுப்பினர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றதாக தெரிகிறது. அதனால் அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளி சீருடை பள்ளிக்கு இன்று வருகை புரிந்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கவனத்திற்கு சென்ற நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மதியத்திற்கு பிறகு விடுமுறை அளித்தது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளுக்காக பள்ளி வைக்கப்பட்டதாகவும், மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் மதியத்துடன் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதையடுத்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள் வந்து அவர்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர். மதியமே பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.