ஜெய் பீம் திரைப்படம் சமவெளியில் வாழும் இருளர் பழங்குடிகளின் வாழ்வியலையும், காவல்துறை சித்ரவதைகளையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விட மலைகளிலும், வனத்திலும் வாழும் இருளர் உள்ளிட்ட பழங்குடிகள் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சிறப்பு அதிரடிப் படையினரால் மலை வாழ் பழங்குடிகள் சொல்லாலான துயரங்களுக்கு உள்ளாகினர். சிறப்பு அதிரடிப் படையினரின் சித்ரவதைகளை பற்றி பேசும் போது, இன்றளவும் தவிர்க்க முடியாத ஒரு பெயர் சின்னாம்பதி.


சின்னாம்பதி என்ற இருளர் பழங்குடியின கிராமம் கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஒரு குக் கிராமம். இக்கிராமம் கடந்த 1994 ஆம் ஆண்டு வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீரப்பன் குறித்த தகவல்களை கூறும் படி, அப்பகுதி இளைஞர்கள் மிக கடுமையாக தாக்கப்பட்டனர். இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




சிறப்பு அதிரடிப் படையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் சிவில் உரிமைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்போது கோவையில் நீதிபதியாக இருந்த பானுமதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சிறப்பு அதிரடிப் படையினர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிபதி பானுமதி பரிந்துரை செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட 2  பெண்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணமும், காயமடைந்த 9 இளைஞர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க உத்தரவிட்டார்.


சின்னாம்பதி வழக்கு குறித்த விபரங்களை ஏபிபி நாடுவிற்கு அவ்வழக்கில் பழங்குடியின மக்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் மு.ஆனந்தன் பகிர்ந்தார். அப்போது பேசிய அவர், “1994 ம் ஆண்டு ஜீன் 11 ஆம் தேதி சின்னாம்பதி கிராமத்திற்குள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சிறப்பு அதிரடி படையினர் 20 க்கும் மேற்பட்டோர் சென்றனர். இரண்டு நாட்கள் முகாமிட்டு வீரப்பன் குறித்த தகவல்களை கேட்டு பழங்குடியின மக்களை சித்ரவதை செய்தனர். ஆண்டுகள் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர். இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். மலைப் பகுதியில் வீரப்பனை தேடிச் செல்வதாக கூறி, அவர்களின் உடமைகளை சுமக்க வைத்து 9 இளைஞர்களை அடித்து துன்புறுத்தினர். 


இந்த சம்பவத்தை அப்பகுதியை சேர்ந்த நில உடமையாளர்களும், அப்போதைய ஆளுங்கட்சியினரும், அரசு அதிகாரிகளும் மூடி மறைக்க முயன்றனர். இதனிடையே கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பழங்குடியின மக்கள் கூட்டமாக வந்து செல்வதை பார்த்த ஒரு பத்திரிகையாளர், அம்மக்களிடம் விசாரித்து செய்தி வெளியிட்டு வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து சிறப்பு அதிரடிப் படையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்திய தொடர் போராட்டத்தினால், அரசு ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்தது.


நீதிபதி பானுமதி சின்னாம்பதி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்த திட்டமிட்டார். இதனை அறிந்த காவல் துறையினர், அப்பகுதி நில உடமையாளர்கள், அரசு அதிகாரிகளால் பழங்குடியின மக்கள் கடும் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகினர்.  நீதிபதி பானுமதி விசாரணையின் போது, சிறப்பு அதிரடிப்படையினரால் தங்களுக்கு எந்த துன்புறுத்தலும் ஏற்படவில்லை என பழங்குடியின மக்கள் சொன்னதால் வழக்கு முடியும் நிலை ஏற்பட்டது.




இதையடுத்து சளைக்காமல் அம்மக்களை சந்தித்து அவர்களின் அச்சத்தை போக்கி சாட்சி சொல்ல வைத்தோம். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் சிறப்பு அதிரடிப் படையினர் சித்ரவதை செய்ததற்கு முகாந்திரம் இருப்பதாக கூறிய நீதிபதி பானுமதி, குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், அக்கிராமத்திற்கு அடிப்படை வசதி செய்து தரவும் உத்தரவிட்டார். இத்தீர்ப்பின் அடிப்படையில் நிவாரணம் மற்றும் அடிப்படை வசதிகள் அரசு தரப்பில் செய்து தரப்பட்டன. ஆனால் சிறப்பு அதிரடிப் படையினர் மீதான வழக்கில் அரசு முறையாக நடத்தாமல் நீர்த்துப் போகச் செய்தது.


ஜெய் பீம் திரைப்படம் வெளியான பின்னர் சின்னாம்பதி வழக்கு குறித்து எழுதும்படி பலரும் வலியுறுத்தினர். இதனால் அச்சம்பவம் குறித்து ஒரு புத்தகம் எழுத திட்டமிட்டுள்ளேன். ஜெய் பீம் திரைப்படம் மனித உரிமை மீறல்களையும், காவல் துறை சித்ரவதைகள் மீதும் கவனத்தை பாய்ச்சி உள்ளது. சமவெளி பழங்குடிகளை விட மலை மற்றும் வனத்தில் வாழும் பழங்குடிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். வன உரிமைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்தி, அவர்களுக்கான உரிமைகளை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.