வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. கோவையில் இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.


கோவையில் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. லங்கா கார்னர், அவினாசி சாலை சுரங்கப்பாதை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.


கோவை வாலாங்குளம் நிரம்பி வெளியேறும் உபரி நீர் சாக்கடை கால்வாய் வழியாக சாலையில் ஆறு போல ஓடி வருகிறது. ராமநாதபுரம், ஒலம்பஸ், புலியகுளம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் சாக்கடை நீரோடு கலந்து ஓடி வருகிறது. இன்றும் நிற்காமல் வெள்ள நீர் செல்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


கோவை மாவட்டம் பெரிய நாய்க்கன்பாளையம் அருகே சி.ஆர்.பி.எப் முகாமிற்குள் வழுக்கி விழுந்த ஆண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த யானை உயிரிழந்தது. இதையடுத்து யானைக்கு உடற்கூராய்வு செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனபால், ரமேஷ் ஆகியோருக்கு நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இருவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பவானி சாகர் அணையின் நீர் மட்டம் உயர்ந்ததால் சிறுமுகை அருகேயுள்ள லிங்காபுரம், காந்தவயல் சாலை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் காந்தவயல், மொக்கைமேடு, உழியூர், காந்தையூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு மாணவர்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பாக சென்று வர மாவட்ட நிர்வாகம் சார்பில் விசைப்படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர் மட்டம் குறையும் வரை இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. முழு கொள்ளளவை எட்ட இருந்த நிலையில், அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


மேட்டூர் அணையின் உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பூலாம்பட்டி, தேவூர் ஆகிய கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.


காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பாகுதிகளில் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24,000 கன அடியாக நீர்வரத்து குறைந்து உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கேத்தி – சேலாஸ் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. மண் மற்றும் பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.