கோவை இராமநாதபுரம் பகுதியில் தேவாலயத்தில் செபஸ்தியார் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை இராமநாதபுரம் பகுதி கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த ராமநாதபுரம் சிக்னல் அருகே ஹோலி டிரினிட்டி கதீட்ரல் என்ற தேவலாயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவலாயத்தின் உள்ளே டிரினிட்டி பள்ளி செயல்பட்டு வருகிறது. தேவலாயத்தின் நுழைவாயில் அருகே புனித செபஸ்தியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால், மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. இதனிடையே நேற்றிரவு பத்து மணியளவில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தேவாலயத்திற்கு முன்பாக வந்துள்ளனர். அப்போது ஒருவர் தேவாலயத்தின் நுழைவாயில் கதவின் மீது ஏறி தேவலாயத்திற்குள் உள்ளே நுழைந்து, அங்கிருந்த செபஸ்தியார் சிலையை கட்டையால் சேதப்படுத்தியுள்ளார்.




சிலையை சேதப்படுத்தும் சத்தம் கேட்டு வந்த தேவாலய காவலாளி ஜான்சன் என்பவர் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்நபர் நுழைவாயில் கதவை தாண்டி குதித்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து காவலாளி ஜான்சன் தேவாலய நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.




இதையடுத்து பாஸ்டின் ஜோசப் என்ற உதவி மத போதகர், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் என்ன காரணத்திற்காக செபாஸ்தியர் சிலை சேதப்படுத்தப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, சிலையை சேதப்படுத்திய நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி, சிலையை சேதப்படுத்தியவர்கள் வந்த வாகனத்தின் எண்ணை கண்டறியும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.




இதனிடையே செபஸ்தியார் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவாலய நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். தேவாலயத்தில் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போதே, அடையாளம் தெரியாத நபர்கள் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து செபஸ்தியார் சிலையை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி சிலைகள் சேதப்படுத்துவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண