கோவை அருகே பேரூராட்சி அலுவலகத்தில் நுழைந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி பாஜகவினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம், பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 22 ம்  தேதியன்று பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் வந்த சிலர் அலுவலகத்திற்குள் நுழைந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளனர். மேலும் ’பாரத் மாதா கி ஜெ’ என முழக்கங்களை எழுப்பினர்.




இதனைக் கண்ட பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைப்பது தவறு எனவும், முகக் கவசம் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் படம் வைக்க வேண்டும் எனவும் பாஜகவினர் கூறியுள்ளனர். மேலும் பிரதமரின் புகைப்படத்தை அகற்றினால் அதற்கு திமுக தான் காரணமெனவும், பிரதமர் புகைப்படம் அகற்றப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து பாஜக நிர்வாகி பாஸ்கரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில், “ ஆலாந்துறை மண்டல பூலுவப்பட்டி பேரூராட்சியில் பாரத பிரதமர் மோடி ஜி போட்டோ பலமுறை சொல்லியும் மாட்டவில்லை. பாஜக தொண்டர்களும், பொது மக்களும் புகைப்படத்தை மாட்டியுள்ளோம். பாரதப் பிரதமர் மோடி ஜி போட்டோ பஞ்சாயத்துகளுக்கு மாட்டியதற்கு ஆலாந்துறை போலீசார் எங்கள் மீது கைஅது நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளனர். அதப் பற்றி நான் கவலைப்படவில்லை. அடுத்த நடவடிக்கையாக அனைத்து பேரூராட்சிகளிலும், ஊராட்சிகளிலும், ரேஷன் கடைகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் பாரத பிரதமர் மோடி ஜி போட்டோ மாட்டப்படும்” என அவர் தெரிவித்து இருந்தார்.




இந்நிலையில் புலுவப்பட்டி பேரூராட்சி அலுவலத்தில் அத்துமீறி நுழைந்து பிரதமர் புகைப்படத்தை வைத்ததோடு, கொரோனா நோய் தொற்றை பரப்பும் வகையில் முக கவசம் அணியாமல் கும்பலாக வந்ததாகவும் பேரூராட்சி செயல் அலுவலர் தங்கசாமி ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது ஆலாந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாஜக  அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரனை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.