யானைகளுக்கு மரணப்பாதையாகும் போத்தனூர் - பாலக்காடு இரயில் பாதை ; யானைகள் உயிர்காக்க கோரிக்கை..!

போத்தனூர் - பாலக்காடு ரயில் பாதையில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் இதுவரை 28 காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்து உள்ளன.

Continues below advertisement

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த நவகரை பகுதியில் ரயில் மோதி கர்ப்பிணி பெண் யானை உட்பட மூன்று யானைகள் உயிரிழந்தது. இது தொடர்பாக ரயில் ஓட்டுநர்கள் சுபைர், அகில் ஆகிய இருவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண் யானை, மக்னா யானை, குட்டி பெண் யானை என 3 யானைகள் பலியான விவகாரம் வன ஆர்வலர்கள், பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. 

Continues below advertisement


போத்தனூர் - பாலக்காடு ரயில் பாதையில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் இதுவரை 28 காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்து உள்ளன. ரயில் மோதி யானைகள் பலியாகும் இதுபோன்ற மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுந்துள்ளது. இது குறித்து இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜலாலூதீன் கூறும் போது, “வனத்தை ஒட்டிய இரயில் பாதையில் இரயில்கள் வரும் போது ஹார்ன் அடித்து வர வேண்டும். அப்பாதைகளில் இரயில்கள் குறைந்த அளவிலான வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் வனப்பகுதியை ஒட்டிய இரயில் பாதைகளில் யானைகள் வர முடியாத அளவிற்கு தண்டவாளத்திற்கு அருகே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல ரயில்வே துறையும், வனத்துறையும் இணைந்து தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்.


வனப்பகுதியில் இரயில்களில் செல்லும் போது வனத்துறையினர், தன்னார்வலர்கள் இணைந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளலாம். இது போன்ற விபத்துகளில் யானைகள் உயிரிழப்பது மட்டுமின்றி, இரயில் தடம் புரண்டால் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் போது மட்டுமே விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே நிரந்த தீர்வு காண முடியும்” என அவர் தெரிவித்தார்.


இதனிடையே இன்று பிற்பகல் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த இடத்தில் தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விபத்து நடந்த பகுதியில் உள்ள "ஏ" மற்றும் "பி" ஆகிய இரு ரயில் பாதைகளிலும் கூடுதல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் வனத்துறையினருக்கு அறிவுறுத்தினார். மேலும் இரவு நேரத்தில் வன ஊழியர்களின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், கண்காணிப்பு பணியை  தெர்மல் டிரோன் கேமராக்கள் மூலமும் இரவு நேரங்களில்  கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். விபத்து ஏற்பட்ட பகுதியில் வன ஊழியர்கள் மேற்கொண்ட பணிகளையும் கேட்டறிந்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola