பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் அளித்த நேர்காணலில், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார். இதன்பேரில் சவுக்கு சங்கர் மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.


பின்னர் தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் காவல் துறையினர், கோவைக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் லேசான விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு சங்கர் உள்ளிட்ட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


நீதிமன்ற காவல்


இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், முதலாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ரிமாண்ட் செய்யக்கூடாது என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞரும், ரிமாண்ட் செய்ய வேண்டுமென அரசு தரப்பு மற்றும் திமுக பெண் வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.


பின்னர் சவுக்கு சங்கரை வருகின்ற 17 ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த போது ஸ்டாலின் குடும்பம் மேலும் மேலும் கொள்ளையடிக்க சவுக்கு ஊடகம் தடையாக இருப்பதால் தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு வருவதாக சவுக்கு சங்கர் முழக்கமிட்டார். இதையடுத்து சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


காவலில் எடுத்து விசாரிக்க மனு


இந்நிலையில் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க ஐந்து நாட்கள் தேவைப்படுகிறது என நீதிமன்றத்தில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றம் அனுமதி அளித்ததும் தனியார் யூ டியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசிய விவகாரம் பற்றி சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.