தமிழ்நாட்டில் இன்று 12 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் திருப்பூர் 97.45 சதவீதம் பெற்று முதல் இடத்தையும், ஈரோடு மாவட்டம் 97.59 சதவீதம் பெற்று 2 ஆம் இடத்தையும், அரியலூர் மாவட்டம் 97.25 சதவீதம் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் 96.97 சதவீதம் பெற்று நான்காம் இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 0.6 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது.


கோவை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வை 33 ஆயிரத்து 399 பேர் எழுதியுள்ளனர். அதில் மாணவர்கள் 15107 பேரும், மாணவிகள் 18,292 பேரும் இத்தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு எழுதியதில் 32,387 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 14,459 பேரும், மாணவிகள் 17928 பேரும் எழுதியுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 95.71 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி எண்ணிக்கை 98.01 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.


அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்


கோவை மாவட்டத்தில் 118 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 770 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர். அதில் 10 ஆயிரத்து 53 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதிலும் மாணவர்களை காட்டிலும், மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.43 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.76 சதவீதமாகவும், அரசுப்பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.34 சதவீதமாகவும் உள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது. இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதியான இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 சதவிகிதம் ஆகவும், அரசு பள்ளிகளில் 91.32 சதவிகிதம், அரசு உதவி பெறும் பகுதிகளில் 95.49 சதவிகிதம் ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.58 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள், நாளை முதலே துணை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கும் நாளை முதலே விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியானதை தொடர்ந்து, வரும் 9ம் தேதி முதல் மாணவர்களுக்கு அவரவர் படித்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.