கோவை அருகே யூடூப் பார்த்து காய்ச்சிய 1200 லிட்டர் கள்ளச் சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கொரோனா தொற்று பாதித்த நிலையிலும் கூலியாட்களை கொண்டு கள்ளச் சாராயம் காய்ச்சியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் வந்தது. கூடவே ஊரடங்கும் வந்தது. இதனால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இழுத்துப் பூட்டப்பட்டன. இப்போது திறந்து விடுவார்கள், அப்போது திறந்து விடுவார்கள் என எதிர்பார்த்த குடிக்காரர்களின் மனக்கணக்குகள் பொய் கணக்காக போனாது. தொடர்ந்து ஊரடங்கு நீடிப்பால் செய்வதறியாது தவித்த குடிகாரர்கள், அதிக விலைக்கு மது வாங்குதல், கள் இறக்குதல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், டாஸ்மாக் கடைகளை உடைத்து திருடுதல் உள்ளிட்டவற்றில் இறங்கினர். இந்நிலையில் நேற்று டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட பின்னரே, நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் தொடர்ந்து டாஸ்மாக் பூட்டியே கிடக்கிறது. இதனால் கோவை உள்ளிட்ட பகுதி குடிகாரர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது.
அத்தகைய குடிகாரர்களுக்காக கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை பேரூர் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த ஆலாந்துறை பகுதியில் சம்பத்குமார் என்பவரின் வீட்டில் சாராய ஊரல் போட்டு இருப்பதாக பேரூர் சரக மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மது விலக்கு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த நபர்கள், காவல் துறையினரை பார்த்ததும் தலை தெறிக்க தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து சம்பத் குமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, 1200 லிட்டர் சாராயம் காய்ச்ச ஊரல் போடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த 10 லிட்டர் கள்ளச் சாராயம் , ஒரு ஸ்கார்பியோ கார், கேஸ் அடுப்பு, இரண்டு சிலிண்டர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கள்ளச் சாராய ஊரலை காவல் துறையினர் அழித்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்திய போது போளுவாம்பட்டியை சேர்ந்த சம்பத் குமார் வாடகைக்கு வீடு எடுத்து, யூடூப் பாரத்து கள்ளச் சாராயம் காய்ச்சி இருப்பதும், கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தி இருக்கும் நிலையிலும், வேலை தொய்வில்லாமல் நடப்பதற்காக கூலிக்கு ஆட்களைக் வைத்து கள்ளச் சாராயம் காய்ச்சியதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பத்குமார் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.