கோவை அருகே அரசூர் ஊராட்சியில் முகக் கவசம் அணியாமல் சாலையோரம் சென்றவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர், மயானத்திற்கு அழைத்து சென்று கொரோனா ஆபத்து குறித்து எடுத்துரைத்து நூதன முறையில் எச்சரிக்கை விடுத்தனர்.


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. அதேசமயம் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் சென்னையை விட கோவையில் அதிகமாக பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமயம் கோவையில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  




கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு அடுத்த இடத்தில், சூலூர் பகுதி உள்ளது. கோவை மாவட்டம்  சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி, அரசூர் ஊராட்சி. இப்பகுதியில் கொரோனா  தொற்று அதிகளவில் உள்ளது. அங்கு கடந்த வாரங்களில் தினசரி 300 பேருக்கு மேல் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது, தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது என பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வந்தனர்.  பல முறை எடுத்துரைத்தும், அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையிலும், பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் இருந்துள்ளது.




இந்நிலையில் முகக் கவசம் அணிவதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசூர் ஊராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதன்படி அரசூர் பகுதியில் சாலையில்  முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு  ஊராட்சி நிர்வாகம் கடுமையான  எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களை முழு கவச உடை அணிந்து வந்த நபர்கள் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்திற்கு அழைத்துச் சென்றனர். மயானத்தை சுற்றிக் காட்டிய ஊராட்சி நிர்வாகத்தினர் கொரொனா ஆபத்துகளை குறித்து எடுத்துரைத்தனர். அப்போது கொரோனா பாதித்தால்  உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை என்பதையும், மயானத்தில்  புதைக்கக் கூட இடம்  இல்லை என்பதை எடுத்துக் கூறி அனுப்பி வைத்தனர். இது அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும், கொரொனாவின் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையில்  முகக் கவசம் அணியாமல் சாலையோரம் செல்பவர்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், மற்றவர்களும் முறையாக முகக் கவசம் அணிய வேண்டுமென்பதற்காகவும் இதனை செய்ததாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.