தமிழ்நாடு அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருந்து வருகிறார். முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.


வருமான வரித்துறை சோதனை:


இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணையை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் விஷச்சாராய அருந்தியதால் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, தீர்வு காண வேண்டும் என பாஜகவினர் மனு அளித்தனர்.


அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபகாலமாக அதிகமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படியான நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 26 ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.




கோவையில் 4வது நாளாக சோதனை:


இந்நிலையில் கோவை அருகேயுள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீடு மற்றும் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளராக இருந்து வருகிறார். அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக மேயர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்பட்ட இவரது மனைவி கிருபாலினி கார்த்திகேயன், தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், தொழில் நெருக்கடி காரணமாக செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் இல்லத்தில் நான்காவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்துள்ளாரா? முறையாக வருமான வரி செலுத்தியுள்ளாரா? உள்ளிட்டவை குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையை ஒட்டி அங்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல தொண்டாமுத்தூர் அருகேயுள்ள கெம்பனூர் பகுதியில் காயத்ரி என்பவருக்கு சொந்தமான நீலாவதி நினைவு அபாஷா போதை மறுவாழ்வு இல்லம், பந்தயசாலை, பீளமேடு, சேத்துமடை ஆகிய பகுதிகளில் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை இன்று நிறைவடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண