மிரட்டல்


கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் அளித்து இருந்தார். அதில், ‘நான் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் முறைகேடுகள் நடப்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்விகளை கேட்டேன். அதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார்.அதே சமயம், பேரூராட்சி தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இதுபோல கேள்வி கேட்கக்கூடாது என எனக்கு மிரட்டல் விடுத்தார். எனது குடும்பத்தினரையும் அவர் மிரட்டினார். அது தொடர்பாக க.க.சாவடி காவல் நிலையத்திலும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தேன்.


சில நாட்கள் கழித்து அப்போதைய மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைசாமி, வடவள்ளி காவல் ஆய்வாளர் மணிவண்ணன், க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் 2 காவலர்கள் எனது வீட்டிற்கு நள்ளிரவில் வந்து விசாரணை எனக்கூறி, என்னை வெளியே அழைத்துச் சென்றனர். நள்ளிரவு 2 மணி முதல் 4 மணி வரை ஆர்.டி.ஐ.யில் கேள்வி கேட்டதற்காக எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் என்னிடம் விசாரணை நடத்தினர்.


பின்னர் மறுநாள் டி.எஸ்.பி.யை சந்திக்க வேண்டுமென சொன்னார்கள். அதன்படி அவரது அலுவலகத்திற்கு சென்ற போது, டி.எஸ்.பி. இல்லை. கேள்வி கேட்டதற்கான என்னை அலைகழித்தனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.


மனித உரிமை ஆணையம் விசாரணை


இதன் பேரில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட ரமேஷ்குமாருக்கு ஒரு இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் காவல் ஆய்வாளர்கள் தூயமணி வெள்ளைசாமி, மணிவண்ணன் ஆகியோரிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயும், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமாரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயும் ஊதியத்தில் இருந்து வசூலித்து ரமேஷ்குமாருக்கு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


இது குறித்து ரமேஷ்குமார் கூறுகையில், “மனித உரிமை ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. என்னை போன்ற சமூக ஆர்வலர்களுக்கு நம்பிக்கையளிக்கும் தீர்ப்பாக உள்ளது. ஆர்.டி.ஐ.யில் கேள்வி கேட்பவர்கள் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு பயப்பட தேவையில்லை. மனித உரிமை ஆணையம் துணையாக இருக்கும் என்பதை இத்தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளது” என அவர் தெரிவித்தார்.