கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள்  நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மனித வனவிலங்குகள் மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.


உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வரும் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்துவதாக தொடர்ந்து விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் கொண்ட கூட்டம், தீத்திபாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. அப்போது அங்கு இருந்த ரேஷன் கடையின் ஷட்டரை  உடைத்து, உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகளை வெளியே எடுத்து போட்டு சாப்பிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள் வனத்துறை உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.




இந்த நிலையில் நேற்றிரவு காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்துள்ளன. நள்ளிரவு நேரத்தில் அய்யாசாமி மலை அடிவாரத்தில் இருந்து வெளிவந்த யானைகள் அருகாமையில் உள்ள தோட்டங்களிலும், கிராமப்பகுதிகளிலும் உலா வந்துள்ளன. இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் வனத்துறை விரைந்து சென்று மூன்று குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


இதையடுத்து அப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குப்பனூர் பகுதி வழியாக சென்று அடர் வனத்துக்கு முன்பாக உள்ள அடர்ந்த புதர்காட்டில் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகளை விரட்ட வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “தற்போது இந்த பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கமாகியுள்ளது. அவ்வாறு ஊருக்குள் வரும் யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. விளை நிலங்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.