திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, ஆளுநர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் படி மசோதாக்கள் மீது ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.  மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும். மசோதாக்களை கிடப்பில் போடக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். அதேபோல திராவிடம் குறித்து நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசி வருவது சர்ச்சையை ஏற்டுத்தி வருகிறது. இதனால் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.




தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பொள்ளாச்சி நகர திமுகவினர் பல்வேறு நூதன போராட்டஙகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மூன்று செட் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உடையான வெள்ளை சட்டை மற்றும் காக்கி டவுசர் ஆகியவற்றை ராஜ் பவன் முகவரிக்கு விரைவுத்தபால் மூலம் அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, தொடர்ந்து தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும், தமிழ் சித்தாந்தத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டினர். மேலும் கடந்த இரண்டு நாட்கள் முன்பு திராவிடம் என்ற இனம் இல்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் பேசி வருகிறார் எனவும் அவர்கள் தெரிவித்தார். ஆளுநர் தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் என்பதையும், அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் இல்லை என்பதையும் உணர்த்தும் விதமாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உடையை அனுப்பி வைக்கப்பட்டது என திமுகவினர் தெரிவித்தனர்.