கோவை அருகே பெரியநாய்க்கன்பாளையம் பகுதியில் நடிகர் சத்தியராஜ் சகோதரி தோட்டத்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி யானை உயிரிழந்த நிலையில், தண்ணீர் தொட்டியை வனத்துறையினர் மூடினர்.


கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படுவது வழக்கம். இதனிடையே கோடை காலம் துவங்கியதால் வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, காட்டு யானைகள் கிராமப்பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது.


இந்நிலையில் பெரியநாய்க்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாய்க்கன்பாளையம் கிராமத்திற்கு அருகேயுள்ள தடாகம் காப்புக்காட்டில் இருந்து நேற்று ஒரு யானைக் கூட்டம் வெளியே வந்துள்ளது. வன எல்லையில் இருந்து சுமார் 180 மீட்டர் தொலைவில் நாய்க்கன்பாளையம் கிராமத்தில் நடிகர் சத்தியராஜின் சகோதரி அபராஜிதா என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்திற்குள் இரண்டு யானைகளும் சென்றுள்ளது. அப்போது அந்த தோட்டத்து வீட்டின், கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில், எதிர்பாராத விதமாக ஒரு யானைக் குட்டி விழுந்துள்ளது. தண்ணீர் தொட்டிக்குள் இருந்து வெளியே வர முடியாமல், தண்ணீரில் மூழ்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. தொட்டியில் இருந்து வீசிய துர்நாற்றத்தின் மூலம் குட்டி யானை, தொட்டியில் விழுந்து உயிரிழந்தது அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பெரியநாய்க்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.


இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிக்குழுவினர் தண்ணீர் தொட்டிக்குள் மிதந்து கொண்டிருந்த உயிரிழந்த குட்டி யானையின் உடலை இருந்து மீட்ட வனத்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை செய்தனர். யானைக்கூட்டம் அதே பகுதியில் முகாமிட்டு இருந்ததால், இன்று காலை யானைக்கூட்டம் சென்ற பிறகு வனத்துறையினர் குட்டி யானைக்கு உடற்கூராய்வு செய்தனர். யானைகள் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி யானை உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள அந்த தோட்டத்திற்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில், காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து இருந்ததாகவும், தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்து இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து குட்டி யானை உயிரிழப்பிற்கு காரணமான தண்ணீர் தொட்டியை வனத்துறையினர் மூடினர். அப்பகுதியில் வேறொரு இடத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் குடிக்க தண்ணீர் தொட்டி கட்டப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண