கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். 42 வயதான இவர், தமிழக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜகவிற்கு ஆதரவான கருத்துக்களையும், திமுக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்தும் பதிவுகளை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கஞ்சா பாலாஜி எனவும், கஞ்சா உள்பட அனைத்து போதை பொருட்களையும் தடை செய்ய வேண்டிய துறைக்கு அமைச்சராக இருந்து கொண்டு கூடுதலாக கோவை பொறுப்பு அமைச்சராகவும் இருக்கும் அமைச்சரே கோவையின் சீரழிவுக்கு காரணம் எனவும் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி வந்த பிறகு அனைத்து விதமான போதை பொருட்கள் விற்பனையும் பலமடங்கு அதிகரிக்கப்பட்டு இளைஞர்களின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது. போதை பொருட்கள் விற்பனையை தடை செய்து மக்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டிய கடமை கஞ்சாபாலாஜியின் துறைக்கே. ஆனால் அமைச்சரோ தன்னுடைய கரூர் கம்பெனி கூடுதலாக சம்பாதிக்க போதை பொருட்கள் விற்பனையை ஊக்குவித்து வருகிறார்” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் செல்வகுமார் மீது கோவை கணபதி புதூர் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி சுரேஷ் குமார் (54) என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சமூக வலைதளங்கள் வழியாக வதந்திகளை பரப்பி பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்துவது, தகவல் தொழிநுட்ப சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் செல்வகுமாரை கைது செய்த சைபர் கிரைம் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வகுமார் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “செல்வகுமார் கைது செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. விடியா அரசின் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், செல்வகுமார் கைது உள்நோக்கம் கொண்டது. சட்டப்போராட்டம் நடத்தி மீட்டெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல செல்வகுமார் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “தமிழக பாஜக தொழில் துறை பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் கைது செய்துள்ள திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கைது செய்வதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்து சுதந்திரத்தை முடக்கி விடலாம் என கனவு காண்கிறது திறனற்ற திமுக அரசு. இதற்கெல்லாம் அஞ்சுபவர்களில்லை பாஜக தொண்டர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.