2 ஆண்டுகளுக்கு இடைவெளிக்கு பிறகு கோவை விழா நடைபெறும் நிலையில், கலைப் படைப்புகளின் கண்காட்சியுடன் இன்று விழா துவங்கி உள்ளது.




கோவையின் பெருமைகளை பறை சாற்றும் வகையிலும், கோவை மக்களிடையே கோவையின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இந்த விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக கோவை விழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இவ்வாண்டிற்கான கோவை விழா நிகழ்ச்சி இன்று துவங்கியது. இதையொட்டி ஏப்ரல் 9 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 17 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 




கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கஸ்மோபாலிட்டன் கிளப் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நிகழ்வுகளை துவக்கி வைத்தனர். விழாவின் முதல் நிகழ்ச்சியாக பந்தய சாலை பகுதியில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள “ஆர்ட் ஸ்ட்ரீட்” துவக்கி வைக்கப்பட்டது. இந்த “ஆர்ட் ஸ்ட்ரீட்”ல் 75 கலைஞர்கள் பங்கேற்று உள்ளனர். இங்கு இரண்டு நாட்களுக்கு சித்திரம் வரைவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, கலைப் படைப்புகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை ஏராளமான கோவை மக்கள் குடும்பத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர்.




கோவை விழாவினை மக்கள் சிறப்பிக்கும் வகையில் “இண்டராக்டிவ் இஸ்டலேஸன்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இண்டராக்டிவ் இஸ்டலேஸன் என்பது தேவையற்ற நெகிழிகளில் வண்ணம் பூசப்பட்டு அதனை கலைப் படைப்பாக மாற்றும் வகையில் மக்களின் பார்வைக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 14,000 விரல் ரேகைகளைக் கொண்டு உலக சாதனையும் நிகழ்த்தப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து கோவை வாலாங்குளம் குளக்கரையில் நாளை மாலை லேசர் ஷோ ஒளிக் கண்காட்சி துவக்கி வைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொள்ள உள்ளார். இதேபோல மராத்தான், சைக்களத்தான் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் வருகிற 17ம் தேதி வரை பந்தய சாலை, வாலாங்குளம், உக்கடம் பெரிய குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கண்டு இரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண