கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் 'ஹெல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும், கோவை மாவட்ட நிர்வாகமும் இணைந்து மன நலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக 'அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம்' நடத்தி வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வரும் இம்மையத்தில் 100 படுக்கை வசதிகள் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 26 பெண்கள் உட்பட 49 பேர் இந்த மையத்தில் தங்கியுள்ளனர். சுமார் 14 ஊழியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
அந்த மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், கடந்த 7 மாதங்களாக தங்கியிருந்தார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களின் உடல் நிலையை அடிக்கடி கண்காணிக்கும் மையத்தின் பணியாளர் செவிலியர், அப்பெண்ணின் வயிறு வீங்கி வருவதை கவனித்துள்ளார். பின்னர் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அப்பெண்ணை அழைத்துச் சென்றார். அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர் அம்மையத்தின் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். பின்னர் அந்த மையத்தின் ஊழியர்கள் விசாரித்த போது, அங்கு பணியாற்றிய கவலாளி லட்சுமணன் என்பவர் அப்பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மையத்திற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அம்மையத்தின் நிர்வாகிகள் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து லட்சுமணனை (வயது 39) கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சிகையலங்கார நிபுணர் மற்றும் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் சமீபத்தில் அங்கிருந்து விலகி ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சியின் நாய்கள் காப்பகத்தில் பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அம்மையத்தில் பணிபுரிந்த போது சிசிடிவி கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததும், இதில் அப்பெண் கர்ப்பம் அடைந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட லட்சுமணன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்