நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், லாரி உரிமையாளரான இவர், தனது நண்பர் சிவக்குமாரின் சிபாரிசின் அடிப்படையில் காளப்பநாயக்கன்பட்டியில் செயல்பட்டுவரும் பெட்ரோல் பங்கில் தனது லாரிக்கு டீசல் நிரப்பிய நிரப்பினார், ஆனால் நிரப்பிய டீசலுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார் லாரி உரிமையாளர் செந்தில். இதனால் செந்தில் கொடுக்க வேண்டிய பணத்தை அவரது நண்பரான சிவக்குமாரிடம் பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர். 


தகவலறிந்த சிவக்குமார் தனது மற்றொரு நண்பரான மலைவேப்பங்குட்டை  பகுதியைச் சேர்ந்தவரும் டாஸ்மாக் ஊழியராக இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டவரும் ஆன  முருகேசனை அழைத்துக் கொண்டு லாரி உரிமையாளர் செந்திலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.


 



 


லாரிக்கு டீசல் நிரப்பியதற்கான நிலுவைத் தொகை குறித்து இருவரும் செந்திலிடம் கேட்டுள்ளனர். டீசலுக்கு பணம் தர முடியாது என லாரி உரிமையாளர் செந்தில் தெரிவித்ததால், செந்திலுக்கும் அவரது நண்பர் சிவக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் கடுமையான வார்த்தைகளால் இரு தரப்பினரும் திட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பணத்தை கேட்கச் சென்ற சிவக்குமாரும், முருகேசனும் செந்தில் வீட்டிலிருந்து புறப்பட்டனர். காளப்பநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சிவக்குமாரும் முருகேசனும் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆத்திரத்துடன் கத்திக் கொண்டு வந்த செந்தில் இருவரையும் வழிமறித்து கத்தியால் குத்த முயன்றார்.


 



அப்போது கத்தியுடன் துரத்திய செந்திலிடம் இருந்து சிவக்குமார் தப்பி ஓடிய நிலையில் சிவக்குமாருடன் உடன் வந்த டாஸ்மாக் ஊழியர் முருகேசனை செந்தில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த முருகேசன் மயங்கி விழுந்தார். படுகாயமடைந்த முருகேசனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டாஸ்மாக் ஊழியரான முருகேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளர் செந்திலை தேடி வருகின்றனர்.



இந்நிலையில் டாஸ்மாக் முருகேசன் கொலைக்கு காரணமான லாரி உரிமையாளர் செந்திலின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை வழக்கு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் முருகேசன் குடும்பத்திற்கு அரசுத்தரப்பில் இருந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்புலிகள் அமைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழ்ப்புலிகள் அமைப்பினரின் போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தநிலையில் சேந்தமங்கலம்-நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சுரேஷ் மறியலில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.