கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார தமிழ், மலையாளம் ஆகிய திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு கள் நடத்தப்படுவது வழக்கம். இயற்கை எழில் மிகுந்த இந்த பகுதிகளில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தன. 


தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்புகள் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக நோய் பரவலைக்  கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 




இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஆற்றங்கரை பகுதியில் நேற்று சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது. சிவி சக்கரவர்த்தி என்ற இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.  இப்படத்தில் எஸ்.ஜெ. சூர்யா, பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆனைமலை மேம்பால பகுதியில் நேற்று சிவகார்த்திகேயன் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையறிந்த அப்பகுதி மக்கள் நடிகர் சிவகார்த்திகேயனை காண்பதற்காகவும், படப் பிடிப்பபை  காண்பதற்காகவும் திரண்டனர். அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரிவர்கள்  வரை நூற்றுக்கணக்கான பொது மக்கள் திரண்டனர். பெரும்பாலானவர்கள் முக கவசம், அணியாமலும்  தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் படப் பிடிப்பை காண்பதில் ஆர்வமாக நின்று கொண்டு இருந்தனர். இதனால்  நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பு நடத்துபவர்கள் வாகனங்களை அப்பகுதியில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆனைமலை காவல் துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் படப் பிடிப்பை நிறுத்தினர்.




கோவை மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா  பரவல் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற சம்பவங்களால் மேலும் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது பொது இடங்களில் படப் பிடிப்பு நடத்துவதற்கு  மாவட்ட நிர்வாகம்  இதுபோன்ற படப்பிடிப்புகளுக்கு  அனுமதி அளிக்கக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வருவாய்த் துறையினர் அனுமதி இல்லாமல் படப் பிடிப்பு நடத்திய டான் படக்குழுவினருக்கு 19,400 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்நிலையில் திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட டான் படக்குழுவினர் 31 பேர் மீது ஆனைமலை காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொற்று தடை உத்திரவிற்கு கீழ்படியாமை, தொற்றுநோயை கவனக்குறைவாக பரப்பும் செயல், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா மோகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.