தொடர் கனமழையால் இன்று (ஆக.04) தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.


அதேபோல் கனமழை காரணமாக வால்பாறை வட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கடுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வால்பாறையில், தொடர்ந்து 3ஆவது நாளாக விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


குற்றால அருவிகளில் குளிக்க 4ஆவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.


தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஆக.03) மாநிலம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கேரளாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக, கேரளாவின் கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 






மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று அந்த மாநில அரசும், மாநில வருவாய் அமைச்சர் ராஜனும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் இளைஞர்கள் செல்பி எடுக்கும் மோகத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


கடந்த 31ஆம் தேதி முதல் ஜூலை 2-ந் தேதி வரை மட்டும் கேரளாவில் கனமழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.