ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பேரூர் நொய்யல் படித்துறை மற்றும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்று படித்துறை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு மேற்கொள்வது வழக்கம். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகேயுள்ள நொய்யல் ஆற்றில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.




கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பேரூரில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பேரூரில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் முன்னோர் வழிபாடு மேற்கொண்டனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் குறைவான தண்ணீர் வரத்து இருக்கிறது. ஆற்றின் படித்துறையில் ஏராளமான புதுமண பெண்கள், புதுத்தாலி கயிறு மாற்றி கொண்டனர். பேரூர் பட்டிஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சுவாமி- பச்சை நாயகி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார். காலை முதலே பக்தர்கள்  நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


ஆனைமலை பாப்பாட்டன் குழல் விழா




கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலைப் பகுதியில் ஆடிப்பெருக்கு அன்று கொண்டாட்டப்படும் பாப்பாட்டன் குழல் விழா பிரபலமாக இருந்து வருகிறது. பாப்பட்டாங்காய் என்னும் பெயருடைய காய், ஆடி மாதத்தில் ஆனைமலையை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் விளையும். அச்சிறுகாய் நுழையும் வகையில் அளவான மரத்துண்டில் துளையிடுவர். அத்துளையுடன் பொருந்தும் வகையில் கைப்பிடியுடன் கூடியதாக சிறு குச்சியினைத் தயார் செய்து, துளையிட்ட மரத்தண்டில் கூம்பு வடிவில் அட்டையை இணைப்பர். வண்ணத்தாள்களால் அலங்கரித்தால், பாப்பட்டான் குழல் தயார்.




ஒரு பாப்பட்டாங்காயை எடுத்து, மரத்தண்டுத் துளையில் பொருத்தி கைப்பிடிக் குச்சியால் வேகமாக அழுத்தினால் அச்சிறுகாய், உடைந்து சிதறும். அப்போது சிறு ஓசை கேட்கும். கூம்பு வடிவம் அவ்வொலியைப் பெரிது படுத்தும். அது பட்டாசு வெடிப்பதைப் போன்று கேட்கும். சிறுவர், சிறுமியர் மிகவும் விருப்பத்துடன் விளையாடுவார். ஆனைமலை வட்டாரத்தில் பாப்பட்டாங்குழல் இல்லாமல் ஆடிப்பெருக்கு சிறாருக்கு இல்லை. இந்த பாப்பட்டான் குழல் நாட்டிலேயே ஆனைமலை பகுதியில் மட்டும் தான் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஆனைமலை வட்டாரத்தில் உள்ளவர்கள் இதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் எருமை பாறை, கோழிகமுத்தி, கூமாட்டி பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களின் பிரதான தொழிலாக பாப்பட்டான் குழல் செய்து வருவது இருந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண