கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மலையேற்றம் செய்வதற்கு ரூ. 5,099 கட்டணத்தை தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வந்த நிலையில், இது விவகாரம் தொடர்பாக அரசு விளக்கமளித்துள்ளது. 


வெள்ளியங்கிரி மலையேற்றம் சர்ச்சை:


வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதபடும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல , திமுக அரசு கட்டணம் விதித்துள்ளது என்றும் தகவல் பரவி வந்தது.



இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்ட நிலையில், செல்வக்குமார் என்கிற பயணர் ஒருவர் தெரிவித்ததாவது “ வெள்ளியங்கிரி மலை ஏற அரசு ₹5353.95 கட்டணம் விதித்துள்ளது. தெற்கில் உதித்த கைலாயமாக, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக வெள்ளியங்கிரி கருதப்படுகிறது. இந்த மலைக்கு, ஆண்டுதோறும் விரதமிருந்து பல லட்சம் மக்கள் பக்தி சிரத்தையுடன் யாத்திரையாக, எந்த கட்டணமும் இல்லாமல் செல்வது வழக்கம்.


கடும் மழை, யானை நடமாட்டம் காரணமாக தை மாதம் முதல் வைகாசி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி. ஆபத்தான மலை பாதையை மேம்படுத்த இதுவரை எந்த ஒரு முயற்சியும் எடுக்காத அரசு, கட்டணம் விதித்து வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது என தெரிவித்திருந்தார். 


உண்மை என்ன.?



இந்நிலையில், இந்த பதிவை தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவானது, இது பொய்யான தகவல் என்றும் விளக்கமும் அளித்துள்ளது. 



அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது “ தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் மலையேற்றம் செய்ய வனத்துறை சார்பில் "டிரெக் தமிழ்நாடு” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், காப்பீடு, வழிகாட்டி வசதி, இருவேளை உணவு, இருவேளை ஸ்னாக்ஸ்,13 கி மீ வாகனப் பயணம், துணி பேக், தொப்பி, பேனா, பறவைகள் பேம்பிளட் போன்றவை அடங்கும்.


இது முழுக்க முழுக்க டிரெக்கிங் சேவை மட்டுமே. ஆன்மீகப் பயணம் இல்லை. கோயிலுக்கு முன்பே இந்த பயணம் முடிந்துவிடும். பக்தர்கள் மலையேற்றம் செல்லும் மாதங்களில் இந்த டிரெக்கிங் சேவை வழங்கப்படாது. மலையேற்றம் செய்யும் பக்தர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. 


 






Also Read: பாமக, தேமுதிக, நாதக பிடிக்காத இடத்தை விஜய் பிடிப்பாரா: திமுக-அதிமுகவுக்கு மாற்றாக வர விஜய்க்கு என்ன சவால்?