கோவை கொடிசியா மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”கடந்த முறை நான் கோவையில் கலந்து கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனது. எட்டு முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து கட்டமைத்த பிம்பத்தை, ராகுல் காந்தி ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து காலி செய்து விட்டார். ராகுல்காந்தி அன்பை என்றும் மறக்க முடியாது.


அவர் வழங்கிய இனிப்பு எதிர்கட்சிகள் கணிப்புகளை பொய்யாக்கியது. 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருந்தது. 40 தொகுதிகளிலும் வெற்றி என்பதை கேட்டபோது, எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


இது 41-வது வெற்றி


இந்த வெற்றி விழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கான பாராட்டு விழா அல்ல, இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கான பாராட்டு விழா. எனக்கு கிடைத்த பாராட்டுகளை மாலையாக கோர்த்து தொண்டர்களுக்கு காணிக்கையாக அணிவிக்கிறேன். இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. நமது அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு கிடைத்த வெற்றி.


கடந்த 2004-ஆம் ஆண்டு 40 க்கு 40 என்ற வெற்றியை கலைஞர் பெற்று தந்தார். அன்று ஆளுங்கட்சி அதிமுக மீதான அதிருப்தியால் கிடைத்த வெற்றி என்றார்கள். அந்த தோல்விக்கு பிறகு ஜெயலலிதா மக்கள் விரோத நடவடிக்கையில் இருந்து பின் வாங்கினார். அது குறித்து கலைஞரிடம் கேட்டபோது, இது 41 வது வெற்றி என்றார். 2004 கருத்துக்கணிப்பில் பாஜகதான் ஆட்சியை பிடிக்கும் என்றார்கள். ஆனால் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் 400 இடங்கள் வரை பாஜக கைப்பற்றும் என்பதை உடைத்து, பாஜகவால் தனித்து அரசு அமைக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளோம்.


கலைஞர் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் இது நமக்கு 41வது வெற்றி.




தொடர் வெற்றிகளுக்கு கூட்டணி தான் அச்சாணி. இந்தியா கூட்டணி தலைவர்களிடம் இருப்பது தேர்தல் உறவு அல்ல. கொள்கை உறவு. 28 கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியை உருவாக்கினோம். இது நாம் ஒன்று சேர மாட்டோம் என நினைத்த பாஜகவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தியா கூட்டணி கட்சிகளை ஐடி, ஈடி, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டல் விடுத்தார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வங்கி கணக்குகளை முடக்கினார்கள். டெல்லி, ஜார்கண்ட் முதலமைச்சர்களை கைது செய்தார்கள்.


தேர்தல் விதிமுறைகளை மீறினார்கள். சிறுபான்மை சமூகத்தை தரக்குறைவாக பேசினார்கள். பொய் செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பினார்கள். இவ்வளவு செய்தும் பாஜக பெற்றது 240 மட்டும் தான். இது மோடியின் வெற்றி அல்ல. மோடியின் தோல்வி. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு தராவிட்டால் மெஜாரிட்டி ஏது?அவர்களால் தான் மோடி பிரதமராக இருக்கிறார். இனி பாஜக நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது.


200 தொகுதிகளை கைப்பற்றுவதே இலக்கு


40 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்யப் போகிறார்கள் என சில அதிமேதாவிகள் கேள்வி கேட்கிறார்கள். நம்மை இழிவுபடுத்துவதாக மக்களை இழிவுபடுத்துகிறார்கள். வாயால் வடை சுடுவது உங்கள் வேலை. எங்கள் எம்.பி.க்கள் கருத்துக்களால் உங்கள் ஆணவத்தை சுடுவார்கள். வெயிட் அண்ட் சி. மைனாரிட்டி பாஜக அரசு அமைந்திருக்கும் நிலையில், நம்முடைய குரல் ஒங்கி ஒலிக்க போகின்றது. சமூக நீதிக்கான அதிகமாக குரல் எழுப்பியது நாம் தான். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் பணிகள் அமைய வேண்டும்.




இந்தியா அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஜகவிற்கு எதிராக நாட்டின் காவல் அரணாக நமது எம்.பி.க்கள் இருப்பார்கள். 40 க்கு 40 என்ற வெற்றி கலைஞர் நூற்றாண்டுக்கு கிடைத்த சிறந்த பரிசு. சட்டமன்ற தொகுதி வாரியாக 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 231 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். தொடர் வெற்றியால் மமதை, ஆணவம் வந்ததில்லை. மக்களுக்கு இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை தந்துள்ளது. உங்களுக்காக உழைப்பது தான் எங்கள் கடமை. இனி எப்போதும் திராவிட மாடல் ஆட்சி என்ற நிலையை உருவாக்குமோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக கூட்டணி கைப்பற்றியது என்ற இலக்கை நோக்கிய பயணத்தை இன்றில் இருந்து துவங்குவோம்” எனத் தெரிவித்தார்.