கோவை கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.


விழாவில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 40 எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின், "அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களைச் சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருப்பதுதான் இந்தியா கூட்டணியின் 41ஆவது வெற்றி" என தெரிவித்தார்.


"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் ‘Close’ செய்தவர் ராகுல் காந்தி" தொடர்ந்து விரிவாக பேசிய ஸ்டாலின், "வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை நம்முடைய கூட்டணி கைப்பற்றுவோம் என்ற இலக்கை நோக்கிய நம்முடைய பயணத்தை இன்றிலிருந்து தொடங்குவோம்.


கடந்த முறை இங்கே நான் கலந்துகொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து ‘Close’ செய்துவிட்டார்!


சகோதரர் ராகுலின் அந்த அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது! அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!


நாற்பதும் நமதே என்று முழங்கினேன்! நடக்குமா? நடக்க விடுவார்களா? என்று பலரும் யோசித்தார்கள். ஆனால், நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் நம்பிக்கைக்கு அடித்தளம் யார்? கொள்கைக்காக இங்கே கூடியிருக்கும் நீங்கள்தான் என்னுடைய நம்பிக்கைக்கு அடித்தளம்!


"இந்தியா கூட்டணியின் 41-ஆவது வெற்றி" 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 என்ற வெற்றியை கருணாநிதி நமக்குப் பெற்றுத் தந்தார். அன்றைக்கு இருந்த நிலைமை என்ன? அப்போது ஆளுங்கட்சி அ.தி.மு.க! அந்தத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை உணர்ந்து, ஜெயலலிதா மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கினார்கள்.


உடனே செய்தியாளர்கள் கருணாநிதியிடம் அதைபற்றி கேட்டார்கள். அவர் சிரித்துக்கொண்டே “இது எங்களுடைய 41-ஆவது வெற்றி” என்று சொன்னார். அதுமட்டுமில்லை, 2004 கருத்துக்கணிப்புகளில், மத்தியில் அளவில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.தான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று சொன்னார்கள்.


ஆனால், காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியைப் பிடித்தது. இப்போதும் அதே மாதிரிதான், பா.ஜ.க. 400 இடங்கள் வரை கைப்பற்றும் என்று சொன்னார்கள். ஆனால், அதை உடைத்து பா.ஜ.க.வால் தனித்து அரசு அமைக்க முடியாத நிலைமையை உருவாக்கியிருக்கிறோம்.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களைப் புரட்சியாளர் அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோம். இதுதான் கருணாநிதி ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால், இந்தியா கூட்டணியின் 41-ஆவது வெற்றி!


2004-இல் நாம் 40-க்கு 40 வெற்றி பெற்றபோது ஆளும் அ.தி.மு.க. மீதான அதிருப்தியில் பெற்ற வெற்றி என்று சிலர் சொன்னார்கள். அது அதிருப்தி என்றால், 2024-இல் பெற்றிருக்கின்ற 40-க்கு 40 வெற்றி, நம்முடைய திராவிட மாடல் அரசு மேல், மக்களுக்கு இருக்கிற திருப்தியில் கிடைத்திருக்கின்ற வெற்றி! 


இங்கே மட்டுமில்லை, 2023-இல் நடைபெற்ற என்னுடைய பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்திலேயே அகில இந்திய தலைவர்கள் அருகில் வைத்துக் கொண்டே “காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது” என்று மேடையில் அறிவித்தேன்.


"பா.ஜ.க. நினைத்தையெல்லாம் செய்ய முடியாது" அகில இந்திய அளவில் பா.ஜ.க.-வை தனிமைப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும் என்று எடுத்துச் சொன்னேன். எல்லாவற்றையும்விட நாட்டின் எதிர்காலமும் ஜனநாயகமும்தான் முக்கியம் என்று தொடர்ந்து சொன்னேன். அதனுடைய விளைவாகத்தான், 28 கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்.

நாம் ஒன்று சேரமாட்டோம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. உடனே இந்த கூட்டணி ஒன்று சேரக் கூடாது என்று என்னவெல்லாம் செய்தார்கள்… ஒவ்வொரு கட்சிகளையும் I.T. – E.D. – C.B.I. – போன்ற புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டினார்கள். காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வங்கிக் கணக்கை முடக்கினார்கள்.


டெல்லி முதலமைச்சரையும், ஜார்க்கண்ட் முதலமைச்சரையும் கைது செய்தார்கள். அதுமட்டுமல்ல, தேர்தல் அறிவித்த பிறகு பா.ஜ.க. என்னவெல்லாம் செய்தார்கள்? விதிகளை மீறி மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதுபோன்று தேர்தல் பிரசாரம் செய்தார்கள். சிறுபான்மைச் சமூகத்தினரைத் தரக்குறைவாகப் பேசினார்கள். உத்திரபிரதேசத்திலும், ஒடிசாவிலும் தமிழர்களைக் கொச்சைப்படுத்தினார்கள்.


ஏராளமான போலிச் செய்திகளையும், அவதூறுகளையும் பல கோடி ரூபாய் செலவில் வாட்ஸ்ஆப்பில் பரப்பினார்கள். இவ்வளவு செய்தும், பா.ஜ.க. வாங்கியது எவ்வளவு? 240 தான்! இந்த 240 என்பது, மோடியின் வெற்றி இல்லை; மோடியின் தோல்வி! 


அருமை நண்பர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களும் – மரியாதைக்குரிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களும் ஆதரவு தந்திருக்காவிட்டால் மெஜாரிட்டி ஏது! அவர்களால்தான் மோடி இப்போது பிரதமராக உட்கார்ந்திருக்கிறார்.


நாம் நம்பிய அரசியல் சட்டமும், ஜனநாயகமும்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. 237 உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறோம். பா.ஜ.க. நினைத்தையெல்லாம் செய்ய முடியாது.


இப்போதுகூட, தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்று என்ன செய்யப் போகிறார்கள் என்று சில அதிமேதாவிகள் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் யாரென்றால்… தங்களை தாங்களே அறிவாளியாக நினைத்துக் கொள்பவர்கள்! ஜனநாயகத்தின் அடிப்படை தெரியுமா அவர்களுக்கு? இப்படி கேள்வி கேட்டு அவர்கள் நம்மை இழிவுபடுத்தவில்லை… நாட்டு மக்களைத்தான் இழிவுபடுத்துகிறார்கள்!


“40 பேர் கேண்டீனில் வடை சாப்பிடச் செல்கிறீர்களா?” என்று சிலர் கேட்கிறார்கள். வாயால் வடை சுடுவது எல்லாம் உங்கள் வேலை! எங்கள் எம்.பி.க்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தைச் சுடுவார்கள்! Wait and seee! இதற்கும் ஒரு எடுத்துக்காட்டு சொல்லட்டுமா. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி.க்கள் 9 ஆயிரத்து 695 கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள். 1,949 விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள். 59 தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 


இதைவிட முக்கியமாக அவர்களுடைய செயல்பாடுகளை அங்கீகரிக்கின்ற இன்னொரு விஷயம் இருக்கிறது… மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஏன், பிரதமர் மோடி என்று ஒட்டுமொத்த பா.ஜ.க. அமைச்சர்களும் தி.மு.க.-வை எதிர்த்துத்தான் நாடாளுமன்றத்தில் அதிகம் பேசியிருந்தார்கள்! இதைவிட வேறு என்ன சான்றிதழ் வேண்டும்?


பா.ஜ.க.வுக்கு அதிகப் பெரும்பான்மை இருந்தபோதே, தங்களுடைய வாதங்களால் நாடாளுமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நம்முடைய தமிழ்நாட்டு எம்.பி.க்கள். இப்போது மைனாரிட்டி பா.ஜ.க. அரசு இருக்கும்போது அடங்கிப் போவார்களா? மக்களுக்கான நம்முடைய குரல் இன்னும் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது" என்றார்.