நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா , கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த டி 23 புலியை பிடிக்கும் பணிகள் ஆப்ரேசன் டி 23 என்ற பெயரில் நடைபெற்று வந்தது. 21 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் கடந்த 15 ம் தேதி நீலகிரி மாவட்ட வனத்துறையினர், மாயார் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். டி 23 புலி 13 வயதான புலி என்பதால் வனத்தில் இடத்தை பிடிக்கும் போட்டியில் இளம்புலிகள் இந்த புலியை தாக்கி இருக்கின்றது எனவும், அதனால் புலியின் உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது எனவும் வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து டி 23 புலி மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புலியின் உடல் நிலை குறித்த தகவலை தமிழக முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் வெளியிட்டுள்ளார். அதில், டி 23 புலி சில பிரச்சனைகள் செய்ததை தவிர நன்றாக இருக்கிறது. ஆண்டிபயாடிக் மருத்துவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன் கால் வீக்கம் குறைந்து வருவதால் கால் நன்றாக வேலை செய்வதாக தெரிகிறது. நன்றாக மலம் கழிக்கிறது. சுமார் 8 கிலோ மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளது. ஆனால் எலும்புகளை சாப்பிடவில்லை. காயங்கள் குணமடைவதற்கான அறிகுறிகள் காணப்படுகிறது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மேம்பட்டு முதல் முறையாக 9 க்கு மேல் சென்றுள்ளது. சீரம் அளவு லேசான கல்லீரல் வீக்கத்தை காட்டுகிறது. டார்ட்ஜப் ஸ்டிக்ஸ் ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகிறது. டி 23 முறையாக கூண்டில் இருந்து வெளிப்பகுதியான டெக்கலுக்கு விடப்பட உள்ளது. அதனால் அது மரம் மற்றும் பச்சை வேலியால் சூழப்பட்ட திறந்த பகுதியில் செல்ல முடியும். சில சமயங்களில் மருத்துவம் செய்யும் மருத்துவரை பார்த்து ஆக்ரோஷமாக இருந்தது. டி 23யின் ஆரோக்கியம் கணிசமான முன்னேற்றஹ்தை காட்டுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வந்தது. உடலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக மக்களை அச்சுறுத்திய புலியை உயிருடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.