கோவையில் பாட்டு கேட்க செல்போன் தராததால் தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக தொழிலாளி கொலை வழக்கில் கைதான தந்தை மகன் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.


கோவையில் ராஜன் என்ற 50 வயது நபர் குப்பை பொறுக்கி அதனை விற்று வந்தார். இவர் ராம்நகர் அன்சாரி வீதியில் சாலையோரம் படுத்துத்தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜன் தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் சாலையோரத்தில் கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் காட்டூர் காவல் துறையினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 18-ஆம் தேதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.


காவல் துறையினர் விசாரணையில் ராஜன் தலையின் மீது கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் இரவு நேரத்தில் தூங்கும் நபர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த தொழிலாளியின் நண்பரான சுப்பிரமணி (67) அவரது மகன் அருள்குமார் (47) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் ராஜனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி, அருள்குமார் ஆகிய இருவரையும் காட்டூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இருவரும் பாட்டு கேட்க செல்போன் தராத ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட இருவரும் அளித்த வாக்குமூலத்தில், “நாங்களும், ராஜனும் அருகருகே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி வந்தோம். ராஜன் வைத்திருந்த செல்போனை வைத்து நாங்கள் பாட்டு கேட்டு வந்தோம். சம்பவத்தன்று மது குடித்து விட்டு செல்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தோம். அப்போது ராஜன் செல்போனில் சார்ஜ் இல்லை. இதனால் அவர் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று சார்ஜ் போட்டு வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வந்ததும் நாங்கள் பாட்டுக் கேட்க செல்போன் கேட்டோம். அதற்கு அவர் தரவில்லை.


இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னிடம் செல்போன் இல்லை கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அருகில் இருந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டு விட்டு தப்பிச்சென்றோம். இதில்  காயமடைந்த அவர் உயிரிழந்து உள்ளார்” என அவர்கள் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.


மேலும் க்ரைம் செய்திகளுக்கு..