பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வருகின்ற அக்டோபர் 28 ஆம் தேதிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.




சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால் , பாபு ஆகிய 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை  தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட 9 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியை சேர்ந்த  அருண்குமார் என்ற நபர் 9 வது நபராக கைது செய்யப்பட்டார்.


பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம்  தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் கூடுதல் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிறையில் உள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஏற்கனவே வழங்கப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் விடுபட்ட பக்கங்களின் நகல்கள் 9 பேரிடமும் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வருகின்ற 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.




கொரோனா தொற்றுப் பரவல், சிபிஐயில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களில் வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அண்மையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசியை நியமித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பின்னர் இவ்வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், கூடுதல் குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.