தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலணி  பகுதியில் அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர்சி. பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், ”மனசாட்சியின்படி பதவியேற்றவர்கள் மனசாட்சி இல்லாமல் செயல்படுவதை கண்டித்து, இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகின்றது. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை மாற்றியமைத்து மத்திய பாஜக அரசு மக்களுக்கு பயனளித்துள்ளது. பாஜக ஆளும் மாநில அரசுகளும் வரியை குறைத்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்ற, திமுக அதை செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறது.




தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளது. குடும்பப் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகனம் போன்ற திட்டங்களை இந்த அரசு நிறுத்தி விட்டது. சமூக பாதுகாப்பு திட்டங்களை நிறுத்தி இருக்கின்றது. கோவையில் சாலைகள் மோசமாக இருக்கின்றது. முழுமையாக சாலைகள் சீரமைக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி  பணிகள் வேகப்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார். 


இதற்கு முன்னதாக பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஊழலோடு பிறந்து வளர்ந்த இயக்கம் திமுக. திமுகவினர் தங்கள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தி கொண்டு இருப்பவர்கள். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் போராட்டம் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.




வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இறையாண்மைக்கு ஆபத்து வரும் போது, தேசத்திற்கு பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தபட்டுள்ளது. இராணுவத்திற்கு நிரந்தமான ஆட்களை எடுக்கவே மாட்டோம் என சொல்லவில்லை. படித்து முடித்து விட்டு எதிர்காலத்தை பற்றி கவலையுடன் இருக்கும் இளைஞர்களுக்கு  தன்னம்பிக்கை கொடுக்கவும், தேச  பக்தியை வளர்க்கவும் அக்னிபாத் திட்டம் பயன்படும். பிரதமர் மோடி எந்த ஒரு முன்னோடி திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை ஏளனப்படுத்துவது, களங்குபடுத்துவது என திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் செயல்படுகின்றது.


தாமரை பாரத தேசம் எங்கும் வளர்ந்து வருகின்றது. விரைவில் தமிழகத்திலும் தாமரை மலரும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். திமுக ஓராண்டு கால ஆட்சியில், எதை சொன்னார்களோ அதை செய்யவில்லை. தாய்மார்களின் வாக்குகளை வாங்கவும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகள் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் பெண்களுக்கு ஆயிரம் ருபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்கள். ஆனால் அதனை செயல்படுத்தவில்லை. 2 ஜி பணத்தை வைத்து செலவு செய்யும் ஆ.ராசா  பிரிவினை வாதத்தை கையில் எடுத்தால், அவருடைய அரசியல் அத்தியாயம் தமிழக வரலாற்றில் இருந்து முடிய போகின்றது என்று அர்த்தம்.




அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடுவது நாகரீகமாக இருக்காது. பாஜக ஒரு கங்கை நதி. பா.ஜ.க வில் யார் வந்தாலும் இணைத்து கொள்வோம். ஸ்டாலின் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். மோடி கொடுத்த தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதால் எங்களுக்கு கொரோனா தொற்று வராது. சேர, சோழ, பாண்டியர் ஆட்சிகளின் கீழ் தமிழகப் பகுதிகள் மாறி மாறி இருந்துள்ளன. அப்படி தமிழகத்தை பிரிக்க வாய்ப்பில்லை. நிர்வாக வசதிக்காக பெரிய மாநிலங்களை பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய தேசம் முழுவதும் உள்ளது. நிர்வாகத் திறன் கூட வேண்டுமென்றால் பெரிய மாநிலங்களை சிறு மாநிலங்களாக பிரிக்க வேண்டுமென்பதை பரிசீலிக்க வேண்டும் என்பது தான் பெரும்பான்மை மக்களின் கருத்தாக உள்ளது” என அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண