Twin Throttlers எனப்படும் யூடியூப் பக்கத்தை நடத்தி 2K கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைய தலைமுறையினரின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் TTF வாசன் தான் கடந்த மூன்று நாள்களாக இணையத்தையும் செய்திகளையும் ஆக்கிரமித்துள்ளார்.
யூடியூபர்
கோவையை மையமாகக் கொண்ட டிடிஎஃப் வாசன் முதன்முதலில் Twin Throttlers எனும் யூட்டூப் சேனலை 2020இல் தொடங்கினார். அப்போது அவருக்கு இருந்த சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 200க்கும் குறைவு தான். பின்னர் தனது யூட்டூப் சேனலினை மேம்படுத்த தனது பயண வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதுவும் தான் பைக்கில் பயணித்து வீடியோக்களை பதிவிட்டு வந்த இவருக்கு 2K கிட்ஸ் தொடங்கி பைக் ஆர்வலர்கள் வரை அனைவரிடமும் பெரும் வரவேற்பு இருந்தது.
இதனால் அடுத்த ஒரு சில மாதங்களில் இவரது யூட்டூப் சேனலின் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 20 லட்சங்களைக் கடந்தது. பெரும் வரவேற்பைப் பெற்ற இவரது வீடியோக்களால் இவரது யூட்டூப் சேனலினை 28.1 மில்லியன் நபர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
கிடைத்தது ஹெல்மெட்
முன்னதாக தனது பிறந்தநாள் மீட் அப்பில் தன் விலை உயர்ந்த ஹெல்மெட் காணாமல் போனது குறித்து வாசன் வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும் தன் நியாபகார்த்தமாக தான் தன் ஹெல்மெட்டை எவரேனும் எடுத்து வைத்திருப்பார்கள், எவரேனும் திரும்ப ஒப்படைப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தன் ஹெல்மெட்டை எடுத்து வைத்திருந்த நபர் தன்னிடம் ஹெல்மெட்டை மீண்டும் ஒப்படைக்க உள்ளதாக TTF வாசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் எண்ணம்....
மேலும் முன்னதாக தனியார் செய்தி சேனல்களுக்கு அளித்த தன் நேர்காணலைப் பகிர்ந்துள்ள டிடிஎஃப் வாசன், ”என்னைப் பார்க்கக் கூடிய மக்களை 2k கிட்ஸ் என குறிப்பிடுவது வேதனைப்படுத்துகிறது. இன்று பிறந்த குழந்தை என அனைத்து வயதினரும் அந்தக் கும்பலில் சந்தித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “சினிமா மட்டுமின்றி எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் செய்வேன், சிறு வயதில் டிடிஎஃப் முன்னேற்றக் கழகம் என ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் என விளையாட்டாகக் கூறியிருக்கிறேன். அது உண்மையாக இருக்காது. எல்லாம் கடவுள் விட்ட செயல்.
பைக் ரைடிங் செய்யும் அனைவரும் பாத்து பத்திரமாக இருங்கள். அனைவரும் நிச்சயம் ஹெல்மெட் அணியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
காவல் துறையில் புகார்
முன்னதாக இவரது பைக் ஸ்டண்டுகளைப் பார்த்து மற்ற இளைஞர்களும் சிறுவர்களும் முயற்சி செய்து விபத்துக்கு ஆளாக வாய்ப்பிருப்பதாக டிவிட்டர்வாசி ஒருவரால் மாநகர சென்னை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு மாநகர சென்னை காவல் துறையின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் கவனத்தில் கொள்ளப்படுகிறது என பதில் அளிக்கப்பட்டிருந்தது.
அந்தப் புகாரில், டிடிஎஃப் வாசன் பைக்கில் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதை தனது யூட்டூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனை மேற்கோள் காட்டி புகார் எழுப்பப்பட்டுள்ளதால், டிடிஎஃப் வாசன் தற்போது நோட்டட் லிஸ்ட்டில் உள்ளார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.