ஆப்ரேசன் டி 23 குறித்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “புலி மனிதர்களை சில இடங்களில் கொன்றது குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை நடைபெற்று வருகின்றது. தினமும் புதிய வியூகங்களை அறிவியல் பூர்வமாக செயல்படுத்தி புலியை பிடிக்க முயன்று வருகிறோம். புலியின் பாதுகாப்பு, வனத்துறையினர் பாதுகாப்பு கருத்தில் வைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. சிங்காரா பகுதியில் டி 23 புலியின் தடயங்கள் இருப்பதால் அங்கு கண்காணிப்பு அதிகப்படுத்தி இருக்கிறோம்.




காட்டில் டி 23 புலிக்கு  வேட்டையாடுவதில் வயது காரணமாக   சிரமங்கள் இருக்கிறது. வனப்பகுதியில் பரண்கள்  அமைத்து புலியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அந்த பகுதியில் எந்தவித  இடையூறும் இல்லாதபடி பார்த்து கொள்ளப்படுகின்றது. மன்றாடியார் வனப் பகுதியிலும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. டிரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அறிவியல் பூர்வமாக புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 6 மருத்துவர்கள் குழுவினர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




ஆட்கொல்லி என இந்த டி 23  புலியை சொல்ல முடியாது. ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்களாக இருக்க வேண்டும். தினமும் 1 கிலோ உணவு வரை புலிக்கு தேவை. ஆட்கொல்லி புலியாக  டி 23 புலியை எடுத்துக் கொள்ள முடியாது. புலியை மயக்க ஊசி செலுத்தி  பிடித்து அதை மருத்துவ குழுவினர் மூலம் கண்காணித்து அதன் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றது. 4 மரணங்களில் முதல் இரு மரணங்கள் இந்த புலியால் நடந்தது என்பதை உறுதிப்படுத்த வில்லை. டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.


வேட்டை தடுப்பு காவலர்களிக்கு ஊதியத்தை 15 ஆயிரம் ரூபாயாக  உயர்த்த வேண்டும் என அரசு பிரதிநிதிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புலியை பிடித்து கூண்டில் அடைத்தால் மன ரீதியாக புலியாக பாதிக்கப்படும் என்பது உண்மை. ஆனால் அதை சரி செய்து கொள்ள முடியும். வருங்காலங்களில் பிரச்சினைக்குரிய  புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடியும். ரேடியோ காலர்களின் எடையும் 5 கிலோ வரை இருக்கும் என்பதால் பிரச்சினை இருக்காது. தன்னார்வலர்களின் செயல்பாடுகளையும் இந்த புலியை பிடிக்க பயன்படுத்தி கொள்கிறோம்.





மயக்க மருத்து கொடுத்து பிடித்த பின்னர் அடுத்த என்ன செய்யலாம் என்பதை மருத்துவக்குழுவினர் முடிவு செய்வார்கள். காடுகளில் வாழும் புலி 14 வருடங்கள் வரை இருக்கும். ஆனால் வன  உயிரின பூங்காகளில் அடைத்து பாதுகாக்கும்  போது 10 ஆண்டுகள் புலி உயிருடன் இருக்கும். டி 23 புலியை பிடிக்கும் பணிகள் அறிவியல் ரீதியாக தீவிரமாக நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார்.