கோடை காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது.  மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோவை மாவட்டத்திலும் கோடை வெயில் தகித்துக்கொண்டு இருக்கிறது. கோவையில் பல மாதங்களாக மழை பெய்யவில்லை. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.


வழக்கமாக மே மாதங்களில் பிற மாவட்டங்களை விட குறைவான வெப்பமே நிலவி வரும் கோவை, இந்த முறை மற்றும் மாவட்டங்களுக்கு போட்டியாக தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகின்றது. இதனிடையே கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் கோவை மாநகர பகுதிகளில் மழை பெய்யவில்லை.


கோவையில் மழை


இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் இன்று மதியத்திற்கு பிறகு வெயில் தணிந்து காணப்பட்டது. பின்னர் இன்று மாலை அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. கோவை பந்தய சாலை, பீளமேடு, கணபதி, மசக்காளிபாளையம், புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், காந்திபுரம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மழை பெய்ததன் காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் மழை


இதேபோல பொள்ளாச்சி பகுதியிலும் இன்று மாலை கோடை மழை பெய்தது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. இதனால் காற்றின் வேகமும் அதிகமாக இருந்தது.


பின்னர் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து, கனமழை பொழிந்ததால் குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.