பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அங்கும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த வழக்கிலும் கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்திருந்தனர்.
5 வழக்குகளில் கைது
இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் என்பவர் கொடுத்திருந்த புகாரின் பேரில் சென்னை காவல் துறையினர் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர். இதே போல தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த வீரலட்சுமி என்பவரும் சென்னை காவல் துறையினரிடம் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரிலும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில், இந்த இரண்டு வழக்குகளிலும் சென்னை காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இந்த இரு வழக்குகளிலும் கைது செய்ததற்கான உத்தரவினை சென்னை காவல் துறையினர் சவுக்கு சங்கரிடம் வழங்கினர்.
இதுவரை ஐந்து வழக்குகளில் யூ டியுபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து அந்த வழக்குகளிலும் அவரை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே சென்னை வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ரிமாண்ட் செய்ய சென்னை அழைத்து வராமல், கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திலேயே ஆஜர்படுத்தி ரிமாண்ட் பெற்று கொள்ள சென்னை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனவே இந்த இரு வழக்குகளிலும் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்திலேயே ரிமாண்ட் செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனை
இந்நிலையில் கோவை மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் சிகிச்சைக்காக உத்தரவை நேற்று பிறப்பித்தது. இந்த சூழலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த சவுக்கு சங்கருக்கு வீல் சேரில் அமர்ந்து அழைத்துச் செல்ல செவிலியர்கள் அறிவுறுத்திய போது, நான் நடந்து வருகிறேன் என தெரிவித்துக் கொண்டு மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றார். வலது கையில் முறிவு ஏற்பட்டதா? எந்த மாதிரி காயம் உள்ளது? என முதலில் அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே செய்யப்பட்டது. இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் ஐந்து நாட்கள் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.