கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஆராய்ச்சி படிப்புகளும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பறவை ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியை சுற்றி காட்டு யானைகள், காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் நடமாடி வருகின்றன.


இந்த பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல் (23) என்பவர் கடந்த வாரம் ஆராய்ச்சி படிப்பிற்காக வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16 ம் தேதியன்று இரவு உணவை முடித்துக் கொண்டு, நண்பர்களுடன் விஷால் தனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானையை பார்த்து அனைவரும் ஓட முயற்சி செய்த நிலையில், அந்த யானை விஷாலை தாக்கியது. இதில் அவருக்கு மார்பெலும்பில் முறிவும், வலது கால் பகுதியில் ரத்த கசிவும் ஏற்பட்டது.




இதனையடுத்து அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று அங்கு இருந்தவர்களிடம் யானை தாக்கிய சம்பவத்தை கூறி உள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த ஊழியர்கள் படுகாயத்துடன் இருந்த விஷாலை மீட்டு உடனடியாக கேரள மாநில எல்லைக்குட்பட்ட கோட்டதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷாலுக்கு இடுப்பு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதை கண்டறிந்து அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரைத்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் விஷால் கோவை சாய்பாபா காலனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் எழும்பு முறிவு கண்டறியப்பட்ட நிலையில், மார்பில் ரத்த கசிவு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் விஷால் உயிரிழந்தார். ஆராய்ச்சி படிப்புக்காக வந்த மாணவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் ஆராய்ச்சி மாணவர் விஷால் உயிரிழப்பிற்கு சலீம் அலி ஆராய்ச்சி மைய நிர்வாகமே காரணமென குற்றம்சாட்டி, அங்குள்ள பறவைகள் ஆராய்ச்சியாளர் சலீம் அலி சிலை முன்பு அமர்ந்து ஆராய்ச்சி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சலீம் அலி சிலை முன்பு விஷால் உயிரிழப்பிற்கு யானை காரணம் அல்ல, முறையான நிர்வாகமின்மையே காரணமெனவும், விஷால் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை மாணவர்கள் வைத்துள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், "விடுதியில் இருந்து கேண்டீன் 600 மீட்டர் தொலைவில் உள்ள நிலையில், அவ்வழியில் விளக்குகள் வசதியில்லை. விடுதியில் குடிநீர் கொடுக்கததால் கேண்டீனுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது. இதனால் டார்ச்லைட் கேட்டதற்கு நிர்வாகம் கொடுக்கவில்லை. விளக்குகள் இல்லாததே யானை தாக்கி விஷால் உயிரிழக்க காரணம்” எனத் தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண