நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆற்றில் இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மலை மாவட்டமாக இருந்து வருகிறது. பல்லுயிர் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தின் வனப்பகுதிகள், காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. குறிப்பாக கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் அதிகளவிலான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கர்நாடகா மற்றும் கேரளா மாநில எல்லைகளில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு, மற்ற மாநிலங்களில் இருந்து காட்டு யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வருவதும், இப்பகுதிகளில் இருந்து அம்மாநிலங்களுக்கு அவை செல்வதும் உண்டு. உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளை முதுமலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் பார்க்க முடியும்.


 






வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம். தற்போது கோடை காலம் நிலவி வருவதால் காட்டு யானைகளின் நடமாட்டம் பகல் நேரங்களிலேயே அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஆற்றங்கரைக்கு தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக யானைகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் மசினகுடி அருகேயுள்ள மரவக்கண்டி பகுதியில் மாயார் ஆற்றில் இரண்டு ஆண் காட்டு யானைகள் தண்ணீர் குடிக்க வந்துள்ளது. அப்போது இரண்டு யானைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆற்றுக்குள் இரண்டு யானைகளும் தும்பிக்கையால் முட்டி தள்ளியும், தந்தங்களால் மோதிக்கொண்டும் ஆக்ரோசமாக சண்டையிட்டு கொண்டன. இரண்டு யானைகளும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தங்களது பலத்தைக் காட்டும் வகையில் பலமாக மோதிக் கொண்டன. 


காட்டு யானைகள் சண்டையிட்டு கொண்ட காட்சிகளை காட்சிகளை அப்பகுதியில் இருந்த வனத்துறையினர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த  சண்டைக் காட்சி வீடியோக்காளை வனத்துறை செயலளர் சுப்ரியா சாகு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,  ”நீலகிரி மாவட்டம் மாசினகுடியில் மாயார் ஆற்றின் நீரில் இரண்டு வலிமைமிக்க யானைகள் மோதிக்கொண்டன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம், இயற்கை உலகில் வெளிப்பட்ட ஒரு நிஜ வாழ்க்கை காட்சியாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு காட்டு யானைகள் ஆக்ரோசமாக மோதிக்கொண்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண