கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்க, முதலமைச்சர் மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் 7 ஆயிரத்து 945 நபர்களுக்கு 110.51 கோடி ரூபாய் மதிப்பிலான நடத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு..ஸ்டாலின், “தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, கொஞ்சும் கொங்கு தமிழை கொண்டது. நான் பல முறை கோவைக்கு வருகை தந்து பல நலத்திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன். இன்று மக்களுடன் முதல்வர் என்ற மகத்தான திட்டத்தை துவக்கி வைத்துள்ளேன். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்ல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்தது. சென்னையில் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழை பெய்தது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைக்கு பிறகு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை செய்தது.


மழை நின்றதும் நிவாரண பணிகளை துவக்கினோம். மறுநாளே முக்கிய சாலைகளில் வெள்ளம் சீர் செய்யப்பட்டது. புறநகரில் ஒருசில பகுதிகளை தவிர நான்கைந்து நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்க்ய் 6 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதை நான் துவக்கி வைத்தேன். கடந்த இரண்டு நாட்களாக தென்மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. அரசு இயந்திரம் தென்மாவட்டங்களில் முழுமையாக குவிக்கப்பட்டுள்ளது அங்குள்ள அதிகாரிகளிடம் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். சென்னை மழை அனுபவத்தை கொண்டு சிறப்பாக செயல்பட்டு, தென்மாவட்ட மக்களை காப்போம்.


முதலமைச்சர் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், மகளிர் விடியல் பயணம் போன்ற திட்டங்கள் சமுதாயத்தில் ஏழை எளிய விளிம்பு நிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. திட்டங்களின் பயன்கள் கடைகோடி மனிதனுக்கும் போய்ச்சேர வேண்டுமென கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை துவக்கினேன். சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்த போது, பொதுமக்கள் பயனடைவதை பார்க்க முடிகிறது. மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் அடிப்படை சேவைகள் இணையம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் அடிக்கடி அணுகும் துறைகளான 13 துறைகளை உள்ளடக்கி மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தொழிநுட்பங்களை பயன்படுத்த மக்களுக்கு சில சிரமங்கள் இருந்தது. அச்சிரமங்களை களைந்து மக்களுக்கு உதவும் வகையில் உருவாக்கிய புதிய திட்டம் தான் மக்களுடன் முதல்வர் திட்டம்.




அரசின் சேவைகளை மக்களுடன் நெருக்கமாக கொண்டு போய், எளிதாக கிடைக்க செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம். அரசின் செயல்பாடுகளை வேகப்படுத்தி தாமதத்தை குறைத்து மக்களுக்கு சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்க இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர் பிரச்சனைகளை தீர்க்க தனி கவனம் செலுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அனைத்து துறைகளும் ஒரே குடையின் கீழ் கூடி மக்களின் கோரிக்கைகளை வாங்கி பதிவு செய்வார்கள். அக்கோரிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகள் 30 நாட்களில் தகுதி அடிப்படையில் தீர்வு காணப்படும். இத்திட்டம் என் நேரடி கண்காணிப்பில் இருக்கும்.


மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டமாக நடக்கும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 745 முகாம்கள் நடத்தப்படும். புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண உதவி தொகை வழங்குவது முடிந்ததும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். பின்னர் இரண்டாம் கட்டமாக ஊரக பகுதிகளில் முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள் அளிக்கும் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, முறையான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தொடர்புடைய அரசு துறை அலுவலர்கள் மக்களின் ஒவ்வொரு மனுக்களுக்கும் முடிவு காண நினைக்காமல், விடிவு காண வேண்டுமென செயல்பட வேண்டும். அரசு மீது ஏழைகள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரிக்க வேண்டும். வட்ட, மாவட்ட அளவிலான பிரச்சனைகளை தீர்த்து மக்கள் கோட்டை நோக்கி வருவதை மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் குறைக்க வேண்டும். அரசுத்துறை அலுவலர்கள் மக்களின் குறைகளை களைய அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். காரணம் சொல்பவன் காரியம் செய்யமாட்டான் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் அளிக்கும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ஏதோ காரணங்களை சொல்லி தட்டி களிக்க கூடாது. மக்களுக்கு நம்பிக்கை என்பது அரசாங்கம் தான். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு தான் இருக்கிறது. மனுக்கள் மீது சரியாக பரிசீலனை செய்து பயனுள்ள வகையில் பதில்களை வழங்க வேண்டும். இந்த திட்டம் முழுமையான வெற்றி பெற வேண்டும்.


கடந்த 2010 ம் ஆண்டு உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலைஞர் அறிவித்த 15 அறிவிப்புகளில் ஒன்று தான் செம்மொழி பூங்கா திட்டம். இது பொதுமக்கள் இயற்கையை தெரிந்து கொள்ளவும், அனுபவிக்கும் வகையில் அமைக்கப்படும். இங்கு நீலகிரி உயிர் கோள மண்டலத்தில் உள்ள அரிய வகை தாவரங்கள் பாதுகாக்கப்படும். இது முதற்கட்டமாக 45 ஏக்கரிலும், இரண்டாம் கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இப்பூங்காவில் உலகத்தரத்துடன் கூடிய பல சிறப்புகள் அடங்கி இருக்கும். இங்கு செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம் உள்ளிட்ட 23 வனங்கள் அமைக்கப்படும். சென்னையில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் நூலகம், சிவகங்கையில் கீழடி அருங்காட்சியகம், திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம், கோவையில் செம்மொழி பூங்கா என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து பார்த்து திட்டங்களை செய்து வருகிறோம். அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் பதவி வழங்கிய மக்களுக்கு உழைப்பதே குறிக்கோளாக கொண்டு உழைத்து வருகிறேன். அரசு வேறு, மக்கள் வேறு அல்ல. நாடும், மக்களும் சேர்ந்து வளர வேண்டும். உலகமே வியந்து பார்க்கும் மாநிலமாக்க எனக்கு நானே உழைத்து வருகிறேன். இந்த காட்சியை விரைவில் காண்போம்” எனத் தெரிவித்தார்.