கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 23வது வார்டில் தூய்மைப்பணி மேற்கொள்ளாதது குறித்து புகார் கூறிய, பட்டதாரி வாலிபரை காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டு ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். பட்டதாரியான இவர், அந்தப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் இந்த பகுதிக்கு குடி வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் ரெயில்வே காலனி பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர தூய்மை பணி மேற்கொள்ளாமலும், சாக்கடைகள் தூர்வாராமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் தேங்கியும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசி நோய் பரவக் கூடிய அபாய சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கௌதம் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மற்றும் புகார் கொடுத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.  


 






இந்த நிலையில் தொடர்ந்து புகார் அளித்து வந்தது தொடர்பாக 23 வது வார்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் கவிதா மற்றும் அவரது கணவர் புருஷோத்தமன் ஆகிய இருவரும் ரயில்வே காலனியில் கௌதம் வீட்டுக்கு நியாயம் கேட்பதற்காக சென்றனர். இதில் நகர்மன்ற உறுப்பினர் கவிதாவுக்கும் கௌதமிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது கௌதம் நகர்மன்ற உறுப்பினர் கவிதாவை தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த நகர மன்ற உறுப்பினரின் கணவர் புருஷோத்தமன் திடீரென எதிர்பாராத விதமாக கவுதமை கீழே தள்ளிவிட்டதாக தெரிகிறது.


 



இதில் கௌதமின் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டதாகக் கூறி, கௌதம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் நகர மன்ற உறுப்பினர் கவிதா மற்றும் அவரது கணவர் புருஷோத்தமன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றுச் சென்றனர். கவுதம் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.