பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மக்களவைத் தேர்தலையொட்டி 'ஏ.பி.பி.' செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, "மகாத்மா காந்தி மிகச்சிறந்த மனிதர். அவரை உலகிற்கு அறிமுகம் செய்யும் கடமையிலிருந்து நாம் தவறி விட்டோம். 1982-ம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பர்க்கின் 'காந்தி' படம் வந்த பிறகுதான் மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்து கொண்டது. அந்த படத்தையும் நாம் எடுக்கவில்லை" என கூறியிருந்தார். சனாதன தர்மத்தை பின்பற்றிய மகாத்மா காந்தியும், அவரது அகிம்சை கொள்கைகளும் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் வழிகாட்டுபவை. அவரை உலக மக்கள் அனைவரிடத்திலும் கொண்டுச் சேர்க்கும் கடமையிலிருந்து,  இந்தியாவை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்தவர்கள் தவறி விட்டார்கள் என்ற ஆதங்கத்தைதான் பிரதமர் மோடி வெளிப்படுத்தியிருந்தார்.


மகாத்மா காந்தி உலகப் புகழ்பெற்ற தலைவர்தான். ஆனால், உலகின் சாதாரண மக்களிடமும் அவர் சென்று சேர்ந்திருக்க வேண்டும். அப்படி கொண்டுச் சேர்த்திருந்தால் அதன் தாக்கம் வேறு விதமாக இருந்திருக்கும் என்பதைத்தான் பிரதமர் மோடி தனது பேட்டியில் வெளிப்படுத்தியிருந்தார். அன்னியர்களான ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து போராடினோம். சுதந்திரம் கிடைத்து விட்டது. இனி நமக்குள் தேர்தல் நடத்தி அரசை தேர்வு செய்ய வேண்டும். எனவே, காங்கிரஸ் கட்சியை கலைக்கும் முடிவில் மகாத்மா காந்தி இருந்தார். அதற்குள் அவர் கொல்லப்பட்டதால் காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் கட்டுக்குள் சென்று விட்டது.


காந்தியை காங்கிரஸ் முன்னிறுத்தவில்லை


மகாத்மா காந்தி மட்டும் இருந்திருந்தால், நேரு அவரது மகள் இந்திரா அவரது மகன் ராஜீவ் அவரது மனைவி சோனியா அவர்களது மகன் ராகுல் என காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் சொத்தாகி இருக்காது. 1989ல் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை இழந்தாலும், 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மன்மோகன் சிங் பெயரில் நாட்டை ஆண்டது சோனியா தான். 55 ஆண்டுகளுக்கும் மேலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நேரு, இந்திரா, ராஜீவ் என ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத்தான் முன்னிறுத்தினார்கள். அரசின் திட்டங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் திட்டங்கள் என எங்கும் நேரு, இந்திரா, ராஜீவ் பெயர்கள் மட்டுமே சூட்டப்பட்டன. மகாத்மா காந்தியை இந்தியாவில் கூட முன்னிறுத்தாத காங்கிரஸ் கட்சி, மகாத்மா காந்தியை சேர்க்க வேண்டிய அளவுக்கு உலகிற்கு கொண்டுச் சேர்க்கவில்லையே என தனது ஆதங்கத்தை, வருத்தத்தை வெளிப்படுத்திய பிரதமர் மோடியை விமர்சிக்கிறது.


பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலை கொண்டாட ஆரம்பித்த பிறகுதான் காங்கிரஸுக்கு அவரது நினைவே வந்துள்ளது. லால் பகதூர் சாஸ்திரியை முற்றிலும் மறைத்து விட்டார்கள். நரசிம்மராவ் இறந்தபோது அவரது உடலைக்கூட காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்க அனுமதிக்கவில்லை. இப்படி நேரு குடும்பத் தலைவர்களைத் தவிர, மகாத்மா காந்தி உள்ளிட்ட மற்ற தலைவர்களை இருட்டடிப்பு செய்த காங்கிரஸ் கட்சிக்கு மகாத்மா காந்தி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. 'இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா' என்றவர்கள்தான் மகாத்மா காந்தியை அவமதித்தவர்கள். அவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். மகாத்மா மண்ணில் பிறந்த பிரதமர் மோடியைப் பற்றி நாட்டு மக்கள் நன்றிவார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் திசைதிருப்பல்கள் எடுபடாது” எனத் தெரிவித்தார்.