பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபல தமிழ் எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் இந்த விருதை தமிழ்க் கவிஞர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான உள்ள பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷணும், 107 பேருக்கு பத்ம ஸ்ரீயும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
பிரபல தமிழ் எழுத்தாளரும், கவிஞருமான டாக்டர் சிற்பி பாலசுப்ரமணியம் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்ம ஸ்ரீ விருத்துக்கு சிற்பி பாலசுப்ரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 86 வயதான இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துபொள்ளாச்சி கிராமத்தை சேர்ந்தவர். இவர் கவிதைகள், கட்டுரைகள் என 130 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார். சிற்பி பாலசுப்பிரமணியம் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
இது குறித்து பேசிய சிற்பி பாலசுப்பிரமணியம்,"தமிழ் இலக்கிய உலகில் இருந்து மிகச் சில எழுத்தாளர்களே இத்தகைய விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்திய அரசின் இந்த விருதுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்க் கவிஞர்கள் சார்பில், நான் இந்த விருதைப் பெற உள்ளேன். இந்த விருதை தமிழ்க் கவிஞர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். முகந்து தீரா கடல், செங்காந்தள் ஆகிய கவிதைத் தொகுப்புகள் உட்பட 3 புத்தகங்களை எழுதி வருகிறேன்" என அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்த விருதுகள் 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விருது 'தனித்துவமான பணியை'யை அங்கீகரிக்க முற்படுகிறது மற்றும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், பொது சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் புகழ்பெற்ற மற்றும் விதிவிலக்கான சாதனைகள் சேவைக்காக வழங்கப்படுகிறது. இன்று அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை, சில மாதங்களுக்குப் பிறகு குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெரும் சிவில் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்குவார்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்