இந்தி எதிர்ப்பில் அதிமுக உறுதியாக இருக்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிராக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து உடபட 12 தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி கூறுகையில், ”மொழிப் போர் தியாகிகளுக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக சார்பில் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அதிமுக தான் தமிழ் மொழிக்காக உயிரை துறந்த வீர மறவர்களுக்கு உரிய மரியாதை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த மொழிப் போரில் கோவை மாவட்டம் முக்கிய பங்காற்றி இருக்கிறது. பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அப்படி தமிழ் மொழியை காத்தார்கள். மொழிப் போரை முன்னிறுத்தி அண்ணா பல்வேறு போராட்டங்களை செய்து ஆட்சியில் அமர்ந்தார். அதிமுக தொடர்ந்து வீர மறவர்களுக்காக அஞ்சலி செலுத்தி வருகிறது.




1937 ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி இந்தி திணிப்பை கொண்டு வந்ததில் இருந்து, இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர். தமிழ் மொழியை காக்க முன்னோர்கள் எடுத்த நிலைப்பாட்டை நாம் காத்து வருகிறோம். இந்தி எதிர்ப்பில் அதிமுக கண்டிப்பாக உறுதியாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து பேட்டியளித்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், ”வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் வீட்டில் அவரை களங்கப் படுத்த வேண்டும் என்பதற்காகவே தற்போது பொறுப்பிலுள்ள அமைச்சரின் தூண்டுதலின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி உள்ளனர். நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை பாதிக்கவும், தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்பதற்காகவே சோதனை நடத்தி உள்ளனர். முன்னாள் அமைச்சரின் வீடுகளில் இருந்து தற்போது அதிமுக ஒன்றிய செயலாளர் வரை திமுக தூண்டுதால் சோதனை நடத்தி வருகின்றனர். இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண