கேள்வி : தேர்தல் களம் திமுக - பாஜக என மாறியுள்ளதாக பாஜக தலைவர்களின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : சிரிப்பாக பார்க்கிறேன். அவர்கள் வாக்கு வங்கி என்ன? எங்களது வாக்கு வங்கி என்ன? எங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டி நடக்கிறது. அதில் நாங்கள் ஜெயிப்பது உறுதி.


கேள்வி : கோவை உட்பட 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்ற அண்ணாமலை கூறியுள்ளாரே?


பதில் : 39 தொகுதிகளிலும் பாஜக ஜெயித்தால், கட்சியை விட்டே சென்று விட தயாராக உள்ளேன். அது எல்லாம் நடக்காது. அவர்கள் பூத்தில் ஆளில்லாமல் கோவையில் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்புறம் எப்படி ஜெயிக்க முடியும்? அப்படியிருக்க தமிழ்நாடு முழுக்க எப்படி ஜெயிக்க முடியும்? தமிழக மண் பாஜகவிற்கு எதிரான மண். தமிழக மண் குடும்ப அரசியலுக்கு எதிரான மண். இன்னொரு பக்கம் ஒரு குடும்பம் கட்சியை கம்பெனி போல நடத்தி கொண்டிருக்கிறது. அதற்கு மக்கள் சம்மட்டி அடி தருவார்கள். இந்தப் பக்கம் பாஜக உள்ளே வராமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.


கேள்வி : கோவையில் நடக்கும் புரட்சி சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்குமென அண்ணாமலையின் சொல்கிறாரே?


பதில் : இதேபோல தான் அவர் கரூரிலும் பேசினார். கரூரில் புரட்சி நடந்ததா? இதேபோல கர்நாடகாவிலும் பேசினார். போகும் இடத்தில் எல்லாம் மார்க்கெட்டிங் பண்ணுவது போல அவர் பேசுகிறார். இங்கு ஒன்றும் நடக்காது. அதிமுக எம்.பி. தான் வருவார். அதிமுக தான் எல்லா பக்கமும் ஜெயிக்கும். அதன்பிறகு எங்கள் ஆட்சி தான் திரும்ப வரும். கோவைக்கான வளர்ச்சி எடப்பாடியார், எஸ்.பி. வேலுமணி வழிகாட்டுதலோடு நடக்கும்.


கேள்வி : நீங்கள் திமுக வேட்பாளரை விமர்சிக்காமல் தன்னை மட்டுமே விமர்சிப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாரே?


பதில் : இல்லை. தொடர்ந்து திமுக வேட்பாளரை விமர்சித்து வருகிறேன். கோவையின் வளார்ச்சி குறித்து நேரில் விவாதிக்க வாங்க என அவரையும் அழைத்து கொண்டு தான் இருக்கிறேன்.




கேள்வி : திமுக, அதிமுக வேட்பாளர்கள் மோடி மற்றும் அண்ணாமலை புராணத்தை மட்டுமே பாடுகிறார்களா?


பதில் : அறையை சாத்தி விட்டு வெளியே ஒரே இருட்டாக இருக்கிறது என நினைத்தால், அதற்கு அவர்கள் தான் பொறுப்பு. கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தால் தான் வெளிச்சம் தெரியும். அண்ணாமலை தன்னைத்தானே உயர்த்தி பேசுகிறார். அவர் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் பூத் ஏஜெண்ட் போட்டு கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மக்களை சென்று பார்த்து கொண்டிருக்கிறோம். அவர்கள் பூத் ஏஜெண்ட் போட்டு முடிப்பதற்குள், தேர்தலே முடிந்து விடும். அதையே போட முடியாமல் சிரமப்படுகிறார்கள்.


கேள்வி : அண்ணாமலையை வீழ்த்த திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து உள்ளதா?


பதில் : கரூர்காரரான அண்ணாமலை ஜெயித்தால், கரூர்காரர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்காக திமுக வீக்கான வேட்பாளரை போட்டுள்ளார்கள் என்ற வாட்ஸ் அப் செய்தி படித்தேன். அடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தால் இது உறுதியாகி விடும். திமுக, அதிமுக எப்போதாவது ஒன்றாக சேர்ந்துள்ளதா? தீயசக்தி திமுகவை எதிர்த்து ஆரம்பித்த கட்சி தான் அதிமுக. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடியார் திமுகவை எதிர்க்கிறார். பாஜக சும்மா டிராமா பண்ணுகிறது.


கேள்வி : ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து பணமழை பொழிந்தாலும், மக்களின் அன்பு மழை பாஜக மீது பொழியுமென்ற அண்ணாமலை கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : சும்மா என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அண்ணாமலை சொல்வதை எல்லாம் என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். மக்கள் சொல்வதை கேளுங்கள். அவர் சும்மா எதாவது சொல்லுவார். அதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. அவர் என்ன பேசுகிறார் என்பது தெரியாமல் பேசுகிறார்.


கேள்வி : அண்ணாமலை வெற்றி பெற்றால் மத்திய அமைச்சாராவர். அதனால் நிறைய திட்டங்கள் வருமென பாஜக பரப்புரை செய்கிறதே?


பதில் : எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். அதற்கு முதலில் ஜெயிக்க வேண்டும். நோட்டாவை விட அதிகமாக ஓட்டு வாங்க வேண்டும். 3 வருடமாக அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தார். அதற்கு முன்பிருந்தே மோடி ஆட்சி தானே இருந்தது? அவர்கள் கோவைக்கு என்ன செய்தார்கள்? மக்களிடம் பிளவு ஏற்படுத்துவது போல ஒரு நிகழ்ச்சி நடத்தியதை தவிர, மோடியும், பாஜகவும் எதுவும் செய்யவில்லை.  தமிழ்நாட்டில் பாஜகவினால் ஆட்சி அமைக்க முடியாது. இந்தத் தேர்தலில் 100 சதவீத வெற்றி வாய்ப்பு எனக்குத் தான். நான் மக்களோடு மக்களாக நிற்கிறேன். இந்த தேர்தலில் அண்ணாமலைக்கு மூன்றாவது இடம் தான். ஒருவேளை நாம் தமிழர் நன்றாக வேலை செய்தால், அவருக்கு நான்காவது இடம் தான்.