கோவை சூலூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியிம் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், ”சூலூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களே மோடிக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோயமுத்தூர் உலகத்தின் முக்கியமான பகுதியாக வரைபடத்தில் இருக்கும் வகையில் எங்கள் செயல்பாடுகள் இருக்கும். பிரதமர் மோடி 400 தொகுதிகள் ஏன் வேண்டும் என்று சொல்கிறார் தெரியுமா? 2024 இருந்து 2029 வரை கடினமான முடிவுகளை எடுக்கும் வகையில் ஆட்சி அமையப் போகிறது.
சட்டப்பிரிவு 370யை நீக்குவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. நமக்கு தற்போது 303 எம்பிக்கள் இருந்தும் கூட கஷ்டப்பட்டு தான் கொண்டு இருந்தோம். மூன்றாவது முறை நமது ஆட்சியில் இருக்கும் போது நதிநீர் இணைப்பு என்பது நிச்சயம் இருக்கும்.
நதிநீர் இணைப்பு
நதிநீர் இணைப்பிற்கு எல்லா மாநிலமும் ஒத்துக் கொள்ளாது. நமது மாநிலத்துக்கு நதிநீர் இணைப்பு என்பது தேவை. உபரி நீர் இருக்கும் மாநிலங்கள் தண்ணீர் கொடுக்க தயாராக இல்லை. இந்தியாவில் 12 மாநிலங்கள் நதிநீர் இணைப்பை எதிர்க்க வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாநிலங்கள் ஆதரவாக இருப்பார்கள். நதிநீர் இணைப்பிற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் தேவை. விவசாயிகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்குவதற்கு மாநில அரசு தயாராக இல்லை. மாநில அரசிடம் பணம் இல்லை. தமிழக அரசை பொருத்தவரை விவசாயிகளுக்கு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. 20, 30 ஆண்டுகளாக மாநிலத்தை வேறு திசையில் கொண்டு போய் விட்டார்கள்.
1958 ல் பேசப்பட்ட திட்டம் ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம். ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்திற்கு பத்தாயிரம் கோடி தேவைப்படும். அதை மாநில அரசால் ஒதுக்க முடியாது. மத்திய அரசுதான் ஒதுக்க முடியும். சூலூர் பகுதி விவசாயிகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. நூல் சம்பந்தப்பட்ட தொழிலில் யாரெல்லாம் இருக்கின்றோமோ, அவர்களது வியாபாரம் இரட்டிப்பாக மாற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2014 - 2019 தனி பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றோம். 2024 கஷ்டமான முடிவுகளை தைரியமாக எடுப்பதற்கு நீங்கள் கடவுசீட்டு கொடுக்கின்றீர்கள். மோடி ஆட்சியில் அதிகமாக பலன் பெற்றது கோவை, திருப்பூர் பகுதிகள் தான்.
சண்டையிட தயாரில்லை
கோவையில் இருந்து நேரடியாக மோடியிடமும், மத்திய அரசிடமும் பேசக்கூடிய ஒருவர் வேண்டும். தமிழகத்தில் அரசியல் மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காகவே வந்திருக்கிறேன். போதை கலாச்சாரம் இருக்கக் கூடாது. இப்பவே 8 லட்சத்து 23 ஆயிரம் கடன் இருக்கிறது. நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்தவுடன் மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சியினை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். போட்டியிடும் வேட்பாளர்களுடன் சண்டைக்கு போவதற்கு நான் தயாராக இல்லை. நம்முடைய சண்டை கோவையை வளர்ச்சி பாதைக்கு போக விடாமல் தடுக்கும் சக்திகளுடன்தான்.
அரசியலை முன்னெடுத்துச் செல்லாமல் பின்னெடுத்துச் செல்லும் நபர்களுடன் தான் சண்டை. 2024 தேர்தலை பொருத்தவரை மக்கள் எழுச்சியாக கட்சி எல்லாம் தாண்டி, கட்சியை பார்க்காமல் மோடிக்கு வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜக உறுப்பினர் கோவையில் கிடைக்கும்போது, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் கோவையில் திறக்கப்படும். தமிழகத்தில் இரண்டு இடத்தில் கட்டாயம் இந்த அலுவலகம் திறக்கப்படும். இளைஞர்கள் பணவசதி எங்கே அதிகமாக இருக்கிறதோ அங்கே போதை பொருள்கள் வரும். சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு என்சிபி அலுவலகத்தை கொண்டு வந்து உட்கார வைக்கும். பத்தே நாளில் ஆர்டர் போட்டு கொண்டு வந்து விடுவோம். அலுவலகம் திறக்கின்றோம். கண்காணிப்பை தீவிரப்படுத்த போகின்றோம்.
வளர்ச்சி வேண்டுமென்றால் திட்டங்கள் வரவேண்டும். இதில் தெளிவாக இருக்கின்றோம். விவசாயம் தொழிற்சாலையில் இருந்து இந்த பகுதிக்கு வளர்ச்சியை கொண்டு வருவதற்கு பாஜக உத்தரவாதம் கொடுக்கின்றது. 18 நாளில் கோவை தொகுதியை முழுமையாக சுற்ற முடியாது. எல்லாரையும் வந்து பார்க்க முடியாது. எல்லா கிராமத்துக்கும் செல்ல முடியாது. ஒரு பக்கம் தமிழகத்தின் அனைத்து தொகுதியிலும் சுற்றுபயணம். இன்னொரு பக்கம் கோவை பாராளுமன்றத்தையும் பார்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும் என்பது எனது ஆசை. 21 லட்சம் வாக்காளர்களையும் சந்தித்து ஓட்டு கேட்டு இருக்க வேண்டும். 400 எம்பிக்களை தாண்டி அமர வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. விநாயகரைப் போல நான் உங்களை சுற்றி வந்து விடுகிறேன். முருகனைப் போல நீங்கள் அனைவரையும் பார்த்து விடுங்கள்” எனத் தெரிவித்தார்.