கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க இன்று முதல் 31 ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த முழு ஊரடங்கில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் - பழங்கள் வழங்கவும் வேளாண் தோட்டக்கலை துறை சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் தலா 10 நடமாடும் வாகனங்கள் என 50 வாகனங்கள் இயக்கப்பட உள்ளது. இந்த வாகனங்கள் மட்டுமின்றி, கோவை நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நடமாடும் வாகனங்கள் செயல்பட உள்ளது.
இந்நிலையில், கோவை ஒசூர் சாலையில் உள்ள மத்திய மண்டல அலுவலகம் முன்பு வேளாண் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்பட உள்ள இந்த நடமாடும் வாகனங்களை தமிழக வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து மாநராட்சியில் 100 வார்டுகள் உள்ள நிலையில் 2 வார்டுக்கு ஒரு வாகனம் என்ற வீதத்தில் 50 வாகனங்களை துவக்கி வைத்தனர். மேலும் கிருமிநாசினி தெளிப்பு பணிகளையும் துவக்கி வைத்தனர். இதில், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். உழவர் சந்தை விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி ஆப்பிள் மற்றும் நாட்டு தாக்காளி 25 ரூபாய், சின்ன வெங்காயம் 50 ரூபாய், பெரிய வெங்காயம் 30 ரூபாய், வெண்டைக்காய் 50 ரூபாய், பச்சை மிளகாய் 40 ரூபாய், முருங்கை 60 ரூபாய், கொத்தமல்லி 60 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், “கோவையில் முழு ஊரடங்கின் போது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் வீட்டின் அருகில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 106 வகையிலான காய்கறிகள், பழங்களை மாநகராட்சி சார்பில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 401 வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உழவர் சந்தையில் விற்கப்படும் விலைக்கே பொதுமக்களுக்கு விற்பனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினம் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்த நபர்கள் குறித்து புகார்கள் பெறாத காரணத்தால் நடவடிக்கை ஏதுமில்லை. பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றி வீட்டில் இருக்க வேண்டும் எனவும் இந்த நோய் தொற்றை முழுமையாக விரட்டுவதற்கு கோவை மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வார்டு வாரியாக சென்று காய்கறி விற்க விரும்பும் வியாபாரிகள் அந்தந்த மண்டல உதவி ஆணையர் இடம் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம்” என அவர் தெரிவித்தார்.