கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்புகள் உறுதிச் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 3944 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரு நாள் பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இதுவரை ஒரு இலட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் காரணமாக மூச்சுத் திணறலோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.



கோவை மாநகரப் பகுதிகளில் அதிகளவில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள் கிராமப்புறங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அந்த சுகாதார நிலையத்தில் பணியாற்றிய மருத்துவர் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த சுகாதார நிலையத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் சுற்று வட்டார கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் இருந்து கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்காக நகரங்களை நோக்கி மக்கள் செல்வதை தவிர்க்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய வசதிகளுடன் மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.



Caption


 


இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அத்திக்கடவு கெளசிகா நதி மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் செல்வராஜ் கூறுகையில், ”கோவை நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாகாரயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினால் பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டாம்பாளையம், கணியூர் உள்ளிட்ட 30 கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். கொரோனா தொற்று கிராம அளவில் தீவிரமடைந்து வரும் நிலையில் அத்தொற்றை கட்டுப்படுத்தவும், கிராம நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவும், கிராம நோயாளிகளுக்கு அடுத்த கட்டமாக எங்கு செல்ல வேண்டும் என வழிகாட்டவும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே உயிர் ஆதாரமாக உள்ளது.


கொரோனா தொற்று காரணமாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மருத்துவமனைகள் எதுவும் மூடப்படவில்லை. கொரோனா தொற்றை சாமாளிக்க முடியாமல் நகரவாசிகளே திணறும் நிலையில், கிராம மக்கள் சிகிச்சைக்காக எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். ஆரம்ப கட்ட சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. நகரங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல பொருளாதார வசதி மற்றும் வாகன வசதிகள் பலரிடம் இல்லை.


கொரோனா தொற்றில் இருந்து கிராம மக்களை காப்பாற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். கூடுதல் மருத்துவர்கள், ஊழியர்கள், உபகரணங்கள் வசதிகளை செய்து தர வேண்டும். முதற்கட்டமாக நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வழிகாட்ட கிராமங்களில் கொரோனா சோதனை மையங்களை அமைக்க வேண்டும். கிராமப்புறங்களில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தினால் தான், மூன்றாவது அலையை சமாளிக்க முடியும். இல்லையெனில் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்” என அவர் தெரிவித்தார்.