கோவை வடக்கு மாநகர மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இந்த கூட்டத்தில் வருகின்ற தேர்தலுக்கு பூத் கமிட்டிகள் அமைப்பது, தேர்தல் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சி நடக்கிறது. சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 2 மணி நேரம் சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசினார். ஆனால் அது வெளிவரவில்லை. இன்று சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுவிட்டது. கோவை மாவட்டத்தில் நீதிமன்றத்திற்குள்ளேயே விரட்டி கொலை செய்யப்படுகிறார்கள். ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண் உயிரிழந்து இருக்கிறார்.
கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை அதிகமாகி உள்ளது. தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் லோடு கடத்தப்படுகிறது.இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் திமுக அரசு உள்ளது. திமுகவினர் அதிகமாக இலஞ்சம் பெறுகிறார். கடத்தல்காரர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அந்த லாரிகளை அனுமதிக்கின்றனர். அதேபோல கோவை மாவட்டத்தில் எந்த திட்டமும் திமுக அரசு செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களை மெதுவாக செய்து கொண்டிருக்கிறார்கள். கோவையை புறக்கணிக்கும் திமுக அரசை நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் புறக்கணிப்பார்கள். மக்கள், இளைஞர்கள் அதிமுகவில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டுமென அனைத்து மக்களும் முடிவு செய்து விட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமி தான் கோடநாடு வழக்கில் எல்லோமும் கண்டு பிடித்தார். அவர் சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி பேசியதும், கோடநாடு வழக்கு பற்றி திமுகவினர் பேசுகின்றனர். எங்கு பார்த்தாலும் இலஞ்சம். எதுவாக இருந்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுகவின் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை ஊடகங்கள் பெரிது பண்ணவில்லை. அதிமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்கை பெரிதாக போடுகிறார்கள். சில ஊடகங்கள் தான் துணிச்சலாக திமுகவினர் பற்றி செய்தி வெளியிடுகிறார்கள். ஊடகங்களை திமுகவினர் மிரட்டுகிறார்கள். ஊடகங்கள் நடுநிலையாக செய்தி போட்டால் இந்த ஆட்சி போய்விடும். 12 மணி நேரம் வேலை திருத்த சட்டம் போட்டதே தவறு. அதை திரும்ப பெற்றதை சாதனையாக சொல்கிறார்கள். எதிர்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்ட பின்னர் வாபஸ் பெற்றுள்ளனர். இதனைக் கூட்டணி கட்சிகள் பாராட்டுவது வேதனையளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்