கோவை அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 7 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள வடிவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். 40 வயதான இவர், பூலுவபட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை எண் 1770 என்ற கடையில் விற்பனையாளராக கடந்த 8 வருடமாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு டாஸ்மாக் கடை வியாபாரம் வழக்கம் போல் முடித்து வரவு செலவு கணக்குகளை பார்த்துள்ளார். பின்னர் இன்று மே 1 தொழிலாளர் தினம் மற்றும் வங்கி விடுமுறை என்பதால் மதுபானங்கள் விற்பனை செய்த பணம் 7 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய், வரவு செலவு கணக்கு நோட்டு புத்தகம் மற்றும் கடை சாவியை ஒரு பேக்கில் எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். மாதம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தற்காலிக பணியாளராக பணி புரியும் மணிகண்டன் என்பவரும், அவருடன் வாகனத்தில் சென்றுள்ளார்.
இருவரும் வடிவேலாம்பாளையம் பாலாஜி பேக்கரி அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க 3 இளைஞர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அப்போது பட்டா கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் விற்பனையாளர் சண்முகசுந்தரம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, வழிப்பறி செய்த இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். டாஸ்மாக் விற்பனையாளரை மிரட்டி பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் அடிக்கடி டாஸ்மாக் பணியாளர்களிடம் இருந்து இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வழிப்பறி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்