சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து, இன்று அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “சொத்து வரி உயர்வை கண்டித்தும், தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகனம் வழங்கும், அம்மா கிளினிக் உட்பட பல  திட்டங்கள் ரத்தை கண்டித்தும், கோவையில் கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து நடத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. திமுக அரசு பல பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்தது. வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு விட்டது.


கொலுசு கொடுத்து விட்டு போனஸ்ஸாக 4000 ரூபாய் வரியை போட்டு இருக்கின்றனர். ஜனநாயக படுகொலை செய்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று இருக்கின்றனர். சொத்து வரியை கட்டும் போது தான் மக்களுக்கு அதன் வீரியம் தெரியும். மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொல்லவில்லை. மத்திய  அரசு சில வழிகாட்டுதல்களை சொல்லி இருக்கின்றது. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு இதை செய்தது. ஆனால் சொத்து வரியை அப்போதைய அதிமுக அரசு உயர்த்தப்படவில்லை. சொத்து வரி உயர்வை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும். இல்லை எனில் கடுமையாக போராட்டம் நடத்துவோம்.




தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சு. பொய் வழக்கு போடுவதில் திமுக அரசை போல யாரும் இருக்க முடியாது. காவல் துறை கேவலமாக இருக்கின்றது. திமுக்காரனுக்கு கூஜா தூக்காதீங்க. திமுகவிற்கு ஜால்ரா போடுறீங்க. இதெல்லாம் நியாயமா? மணல், சிமென்ட், கம்பி என அனைத்தும் விலை உயர்ந்து இருக்கின்றது. அரசு சம்பளம் வாங்கும் காவல் துறை செய்வது பாவச் செயல். இதெல்லாம் திரும்ப வரும். கண்டிப்பாக சொத்துவரி உயர்வை நிறுத்த வேண்டும். வசூல் பண்ணும் போது மோசமான விளைவுகள் ஏற்படும். திமுக அரசு விளம்பரத்தால் ஓடுகின்றது. திமுக என் மீது வழக்கு போட்டால் அதை காலையில் இருந்து மாலை வரை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு பிரச்சினையை வெளியே கொண்டு வந்ததே பொள்ளாச்சி ஜெயராமன். இதை அப்படியே அவர் மீதே திருப்பினார்கள். விருதுநகர் சம்பவத்திற்கு கனிமொழி, கம்யூனிஸ்ட்கள் யாரும் பேசவில்லை. பத்திரிகைகாரர்கள் இந்த ஆட்சிக்கு ஜால்ரா அடிக்கின்றனர். பத்திரிகைகள் நினைத்தால் இந்த ஆட்சி மாறிவிடும்” என அவர் தெரிவித்தார்.


இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி கூறுகையில், ”மக்களை துன்புறுத்தும் விதமாக கடுமையான  சொத்து வரி, அம்மா கிளனிக், அம்மா இரு சக்கர வாகனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் மூலமாக வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்த  வேண்டும். மினி கிளினிக் மூடப்பட்டுள்ளதால் தற்போது மருத்துவர்கள் செவிலியர்கள் போராடி வருகின்றனர். அம்மா கிளினக், அம்மா இரு சக்கர வாகன திட்டம் போன்றவை மீண்டும் கொண்டு வர வேண்டும்.




நிலுவையில் இருக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை பொறுத்த வரை எல்லா மாநில அரசும் வரியை குறைத்தார்கள். டீசலுக்கு வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் மத்திய அரசும் வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசின் பல சட்டங்களை கடுமையாக எதிர்க்கும் திமுக அரசு, சொத்து வரிக்கு மத்திய அரசை காரணம் காட்டுகின்றது. சொத்து வரியை திமுக அரசு தான் உயர்த்தி இருக்கின்றது. அரசு பணத்தில் மானியத்தை கொடுத்து சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.